Breaking News

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கையானது 23 ஆக உயர்ந்தது.

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் கட்டுமான பணி நடைபெற்று வந்த பாலம் நேற்று பகல் 12.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் பாலத்துக்கு அடியில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ், ஏராளமான கார்கள், டாக்சிகள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டன. தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

விபத்தில் 18 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. 60 பேர் வரை காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களிலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணியானது நடைபெற்றது. அப்போது மேலும் 7 பேரது சடலங்கள் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது. பாலம் இடிந்து விழுந்த பகுதியில் இருந்து கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திஉள்ளன. இதற்கிடையே, பாலத்தை நிறுவும் ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் இந்த விபத்து பற்றி கூறும்போது, ‘‘ இது கடவுளின் செயல் அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை’’ என்று கூறியுள்ளது.

பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக ஐ.வி.ஆர்.சி.எல். உள்கட்டமைப்பு நிறுவனத்திடம் விசாரிக்க கொல்கத்தா போலீசின் 5 பேர் கொண்ட குழுவானது ஐதராபாத் சென்று உள்ளது.