Breaking News

வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு செல்ல மீண்டும் பதிவு



ஸ்ரீலங்காவின் வடபகுதிக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் இராணுவத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இதுதொடர்பான அறிவுறுத்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.மனிதாபிமான உதவிகளை வழங்கும் பொருட்டு ஐரோப்பாவிலிருந்து வருகை தந்த ஈழத்தமிழர் ஒருவர் இதுதொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் செயற்படும் இராணுவப்புலனாய்வு பிரிவினரால் வடபகுதியில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் கடத்தல் முறையிலான கைதுகள் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திலுள்ள பயண ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டு முன் அனுமதியைப் பெறுமாறு கொழும்பிலுள்ள இராஜதந்திர பிரதிநிதிகளும் குறித்த ஈழத்தழிருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு மற்றும் வவுனியாவின் ஓமந்தையின் வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலம், இராணுவ விசாவை பெறவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த குறித்த பகுதிகளுக்கு தரை மார்க்கமாக செல்லும் பகுதிகளில் காணப்படும் இராணுவ சோதனைச் சாவடிகளில் வெளிநாட்டவர்களின் குறித்த இராணுவ விசா பரிசோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள இராணுவ படைப்பிரிவுகளின் அதிகாரிகள் கிராமமட்டத்தில் மறைமுகமான கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கான விபரங்களை தயார்ப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து வந்த இரண்டு ஈழத்தமிழர்கள் இந்த மாதம் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.