Breaking News

நெடுங்கேணி பொது விளையாட்டு மைதானம் யானைத் தாக்குதலில் பாரிய சேதம்

நெடுங்கேணி நகர்ப்பகுதியில், கடந்த ஆண்டின் கிராமத்திற்கு ஒரு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட, பொது விளையாட்டு மைதானத்தின் பாதுகாப்பு சுற்றுவேலி, யானைத் தாக்குதலில் பாரிய சேதமடைந்துள்ளதாக பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வவுனியா மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய இப்பிரதேசத்தில் அண்மைக் காலமாக யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒலுமடு , சேனைப்புலவு பிரதேசங்களில் வயல்கள் குடிமணைகளை தாக்கியழித்த யானைகள் தற்போது நகரின் மத்தி வரைக்கும் படையெடுக்கின்றன.

இதன் ஒரு கட்டமாக நெடுங்கேணி நகர்ப்பகுதியில் கடந்த ஆண்டின் கிராமத்திற்கு ஒரு மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்ட பொது விளையாட்டு மைதானத்தின் பாதுகாப்பு சுற்றுவேலிகளை  யானை தாக்கி அழித்துள்ளது.

குறித்த விளையாட்டு மைதானமானது நகரின் மத்தியில் உள்ளது. இதனால் கிராமத்தில் நிலவிய அச்சம் தற்போது நகரையும்  பீடித்துள்ளது. குறித்த விளையாட்டு மைதானத்திற்கு அருகில் பழமை வாய்ந்த ஆலயம் , சந்தை என்பன உள்ளதுடன் இப்பகுதிக்கான காவல் நிலையமும் உள்ளது.

இவை அனைத்தையும் தாண்டி யானைகள் கூட்டமாக நகர்வரை படையெடுக்கின்றன.

இதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்ட யாணை வெடிகளிற்கும் சிறிதும் அஞ்சாது அவை சர்வ சாதாரணமாகச் செல்வதும் மக்களிற்கு மேலும் அச்சமூட்டுகின்றது என்றார்.