Breaking News

தமிழினத்தை தலைநிமிர்ந்து வாழ வைப்போம் : வியாழேந்திரன்



கடந்த காலத்தில் தமிழ் மக்கள் இழந்தவற்றில் சிலவற்றையாவது, புதிய அரசியலமைப்பினூடாக பெற்று, தமிழ் இனத்தை இந்த தேசத்தில் தலைநிமிர்ந்து வாழவைப்போம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த நிகழ்வில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-

”நான் இந்த நிகழ்விற்கு வருவதற்கு தயாராகும்போது, இங்கு வரவேண்டாம் என்றும் ஆயுதங்களுடன் தயாராக இருப்பதாகவும் கூறி, தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அப்போது, இந்த நல்லாட்சியிலும் மஹிந்த ஆட்சி தலைதூக்கிவிட்டதோ, என எண்ணினேன். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். மற்றவர்கள் எம்மை பார்த்து கேலியும் கிண்டலும் பண்ணாமல் இருக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

தற்போது நாங்கள் ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். இத் திட்டத்தில் வட கிழக்கு மக்களுக்கு, குறிப்பாக இலங்கை சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வுத்திட்டத்தை இந்த அரசு பெற்றுத்தர வேண்டும். எம் மக்களது உரிமைக்காக, கடந்த மூன்று தசாப்த காலமாக இழக்கக்கூடாத அனைத்தையும் இழந்திருக்கிறோம். ஆகவே வரவிருக்கின்ற இந்த அரசியல் மாற்றத்தில் எம் மக்களுக்கு ஒரு சிறந்த ஒரு தீர்வுத்திட்டம் கிடைக்க வேண்டும். அவ்வாறான ஒரு திட்டத்தின் ஊடாக நாம் கடந்த காலத்தில் இழந்த பல விடயங்களில், சில விடயங்களையாவது பெற்று எம் இனத்தை மீண்டும் இந்த தேசத்தில் தலைநிமிர்ந்து வாழ்வதற்குரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்றார்