Breaking News

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 18 இராணுவத்தினர் கைது?

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதியளவில் 10 படையினரும் ஏனைய சட்டத்தின்கீழ் 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பியிருந்த கேள்விக்கு அவையில் ஆற்றுப்படுத்தப்பட்டிருந்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ’2016 ஆம் ஆண்டு, ஜனவரி 14 ஆம் திகதியளவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் 7 தரைப்படையினரும் 03 கடற்படையினரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விமானப்படையினரோ அல்லது பொலிஸாரோ குறித்த சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படவில்லை.

அத்துடன், மேற்படி காலப்பகுதியில் ஏனைய சட்டத்தின்கீழ், 04 தரைப்படையினரும், 4 பொலிஸ் அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரோ, விமானப்படையினரோ கைதாகவில்லை. இதுவரையில், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படாமையினால் கைதுசெய்யப்பட்ட அதிகாரிகளின் பெயர் விவரங்களை வெளியிடுவது முறையற்ற செயற்படாகும் என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ‘பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமையுடன் தொடர்புடையவர்களெனக் குற்றம் சாட்டப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு, பொலிஸாரினால் தயாரிக்கப்பட்ட போலியான விடயங்கள் உள்ளடங்கிய கூற்றுகளில் கையொப்பமிடுமாறு, சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலவந்தப்படுத்துவதாக, நீதிமன்றத்துக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதா?’ என உதய கம்மன்பில எழுப்பியிருந்த கேள்விக்கு, ‘இல்லை. அவ்வாறானதொரு முறைப்பாடு இதுவரையில் பொலிஸ் திணைக்களத்துக்கு கிடைக்கவில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது’