நடிகர் சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வந்த ரகசியம்!
‘‘என்னை கறி வேப்பிலையாக பயன்படுத்தி து£க்கி எறிந்து விட்டார்கள் ’’ என்று அதிமுக மீது குற்றம் சாட்டிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு திரும்பி வந்திருக்கிறார்.
ஜெ.வின் அவமதிப்பால் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெறுவார் என்ற அளவில் பேட்டி அளித்துவந்த அவர் கடந் வாரம் சத்தமில்லாமல் கார்டன் சென்று பேசிவிட்டு வந்திருக்கிறார். சரத்குமாரின் கோபத்தை தணித்தது எது என்று விசாரணை செய்தால் விஷயம் வேறுவிதமாக இருக்கிறது.
தனது கோபம் தணிந்தோ அல்லது கட்சியின் எதிர்காலம் கருதியோ சரத்குமார் மீண்டும் காரடன் செல்லவில்லை. அம்மா அழைப்பை புறக்கணித்திருந்தால் இந்நேரம் சரத்குமார் ஊடகங்களில் வைரலாகி இருந்திருப்பார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். நடிகர் சங்க விவகாரம் உள்பட பல விவகாரங்களை காட்டி அவர் அதிமுக கூட்டணிக்கு வந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியை ஆளும்கட்சி ஏற்படுத்திதாலேயே அவர் காரடனில் கைகட்டி அமர்ந்து அம்மாவிடம் பேசிவிட்டு வரநேர்ந்ததாக கூறுகின்றனர் அவர்கள். இதுதவிர மற்ற சிலவிஷயங்களும் சரத்குமாரை வளைக்க ஆளும்கட்சி கையிலெடுத்ததாகவும் இதன் பின்னணியில் பல்வேறு விசயங்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தென்காசியிலும், கட்சியின் மூத்த நிர்வாகி எர்ணாவூர் நாராயணன் நாங்குநேரியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபையில் ஆளும்கட்சியினருக்கு நிகராக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் முதல்வர் ஜெயலலிதாவை வானுயர புகழ்ந்து தள்ளி வந்தார். இதற்கிடையே சரத்குமார் தலைவராக பதவி வகித்த தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வந்தது. அவரை எதிர்த்து நடிகர் விஷால் மற்றும் நாசர் ஆகியோர் அடங்கிய பாண்டவர் அணி சரத்குமார் அணியை எதிர்த்து தேர்தலில் களம் இறங்கியது.
அதிர்ச்சி அடைந்த நடிகர் சரத்குமார் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக சந்திக்க அனுமதி கேட்டு பல முறை போயஸ் கார்டனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்பினார். ஆனால் போயஸ் கார்டனில் இருந்து சரத்குமாருக்கு கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. எதிர்பார்த்தபடி நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியை தழுவினார். நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
சரத்குமாருக்கு திறக்காத போயஸ் கார்டனின் வாசல் கதவு நடிகர் விஷால் தலைமையிலான அணிக்கு திறந்தது. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் விஷால் அணிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். நொந்து போன நடிகர் சரத்குமார் தனது கட்சியின் மூத்த நிர்வாகியும் நாங்குனேரி எம்.எல்.ஏ.,வுமான எர்ணாவூர் நாராயணனை அழைத்து இருவரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வோம் என்றார். ஆனால் எர்ணாவூர் நாராயணனோ அதற்கு மறுப்பு தெரிவித்து அதிமுகவின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.
நொந்து போன நடிகர் சரத்குமார் கடந்த 5 ஆண்டுகளில் என்னை கறிவேப்பிலை மாதிரி அதிமுக பயன்படுத்திக்கொண்டது என்று விமர்ச்சிக்க தொடங்கினார். அதோடு நிற்காமல் தனது மனைவி நடிகை ராதிகா மூலம் இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். நடிகை ராதிகா திமுகவின் கனிமொழியிடம் இது பற்றி பேசினார். கனிமொழி இது பற்றி திமுக தலைவர் கருணாநிதியிடம் தெரிவிக்க இதற்கு மு.க., ஸ்டாலின் நடிகர் சரத்குமாருக்கு முன் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இல்லை. எனவே அவர் திமுக கூட்டணிக்கு வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டார்.
அதிர்ச்சி அடைந்த நடிகர் சரத்குமார் அடுத்ததாக கதவை தட்டிய இடம் பா.ஜ.. சட்டசபை தேர்தலில் பா.ஜ., வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அறிவித்தார். அதோடு காமராஜர் பிறந்த ஊரான விருதுநகர் அல்லது சிவகாசியில் போட்டியிடலமா என்று தனக்கு நெருக்கமானவர்களிடம்ஆலோசனை நடத்தியுள்ளார்.
நடிகர் சரத்குமாருக்கு சகல விஷயத்திலும் உதவியாக இருந்து வரும் விருதுநகர் தொழிலதிபர் மதிப்பிரகாசம் மற்றும் சரத்குமார் சார்ந்த சமுதாயத்தின் முக்கிய புள்ளியான கரிக்கோல்ராஜ் ஆகியோர் விருதுநகர் மாவட்டத்தில் நாடார் சமுதாயம் மட்டுமின்றி முக்குலத்தோர், நாயக்கர் உள்பட பல்வேறு சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். எனவே விருதுநகர் மாவட்டம் உங்களுக்கு கை கொடுக்காது என்று சொல்லி கை விரித்து விட்டனர். போற பக்கம் எல்லாம் கதவை சாத்துறாய்ங்களே என்று அப்செட் ஆனார் நடிகர் சரத்குமார்.
இதற்கிடையே அதிமுக தலைமைக்கு உளவுத்துறையினர்.... தென் மாவட்டங்களில் நாடார் சமுதாய மக்கள் ஆளும்கட்சியான அதிமுக மீது அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே அதிமுக கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் கட்சி இடம் பெற்றால் நல்லது என்று ரிப்போர்ட் கொடுத்தனர். உடனே அதிமுக தலைமை நடிகர் சரத்குமாரை கூட்டணிக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. இதற்கிடையே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
அதில் நடிகர் நாசர் தலைமையிலான அணியினர் முன்னாள் நடிகர் சங்கத்தலைவரான சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் நடிகர் சங்க கணக்கு வழக்குகளை ஒழுங்காக ஒப்படைக் கவில்லை. கோடிக்கணக்கில் ஊழல் செய்துள் ளனர் என்று அறிவித்ததோடு சென்னை போலீஸ் கமிஷனரிடமும் இதுதொடர்பாக புகார் மனு அளித்தனர்.
இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட உளவுத்துறையினர் நடிகர் சரத்குமாரிடம் பேசினர். நடிகர் சங்க ஊழல் விவகாரம் உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்பிருப்பதாக சொல்லி நெருக்கடி கொடுத்தனர். அதிர்ச்சி அடைந்த நடிகர் சரத்குமார் அதிமுகவுடன் கூட்டணியில் சேர அவசர அவசரமாக ஒப்புக்கொண்டார் என்கிறார்கள். இதற்கு பிறகு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். தற்போது அதிமுக தலைமையிடம் நடிகர் சரத்குமார் ஏற்கனவே வெற்றி பெற்ற தென்காசி அல்லது ஆலங்குளம் தொகுதியை கேட்டிருக்கிறார். இதற்கு அதிமுக தலைமை ஓகே சொல்லியிருக்கிறதாம்.
அதே நேரத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகியான மற்றொரு எம்.எல்.ஏ., எர்ணாவூர் நாராயணன் சென்னை அருகே திருவொற்றியூரை கேட்டிருக்கிறார். அதிமுக தலைமை ஓகே சொல்லியிருக்கிறது.
- எம்.கார்த்தி