நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்
நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்திய விவகாரத்தை, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இனவாத நோக்கில் பரப்புரை செய்து வருகின்றன.
நயினாதீவு நாகதீப விகாரைக்கு முன்பாக, 120 மில்லியன் ரூபா செலவில், 75 அடி உயர புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கடற்படையின் உதவியுடன், நாகதீப விகாரையின் விகாராதிபதி இந்த பாரிய புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வந்தார்.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சிலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தும்படி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகதீப விகாரையின் விகாராதிபதிக்கு கடிதமூலம் அறிவித்திருந்தார்.
இதனைக் கண்டித்த விகாராதிபதி இது ஒரு சதித்திட்டம் என்றும் இதற்குப் பின்னால் மறைமுகமான அரசியல் கரம் ஒன்று இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நயினாதீவு விகாரையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை வடக்கிலுள்ள தீவிரவாதிகள் பல ஆண்டுகளாகவே குழப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி, பிரதமரும் தலையிட்டு, புத்தர் சிலையை அமைப்பதற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றும், அவர் நயினாதீவு சென்றிருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, மற்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரிடம் கோரியிருந்தார்.
சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்துடன் பரப்புரை செய்து வரும் நிலையில், நயினாதீவில் புத்தர் சிலையை அமைப்பதை இடைநிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மைய ஊடகச் செய்திகள் தவறானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் சிலையை அமைப்பதற்கு, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியை வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.