மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மகிந்த ராஜபக்ச தவறாக விமர்சித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றபோது, அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க,லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இதுகுறித்து தெளிவுபடுத்தினர்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க கருத்து வெளியிட்ட போது, ‘ஒருசிலர் தமது தனிப்பட்ட நோக்கங்களை மாத்திரம் கருத்தில் கொண்டு சுயநலமாக செயற்படுவதுடன் கட்சியை வீழ்த்துவது மட்டுமல்லாது அதிபரின் காலைவாரும் செயலையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பொது எதிரணியினர் என்ற குழுவினர் இன்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வீழ்ச்சியை விரும்புகின்றனர். இவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு தலைமைத்துவத்தை வீழ்த்த கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
சிறுசிறு கட்சிகளின் உறுப்பினர்கள் ஒரு சிலர் மாத்திரம் தலைமைதாங்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்று எவரும் அங்கம் வகிக்க முடியாது.இந்த அணியினர் கூட சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டுக் கட்சியாகவே இருக்கின்றனர்.
இவர்களை வைத்து மகிந்தவோ அல்லது பசில் ராஜபக்சவோ கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்ற நினைப்பது சாத்தியமில்லாத விடயம்.சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இரண்டு தலைவர்கள் இல்லை. இரண்டு தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
இப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அதன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் மைத்திரிபால சிறிசேனவே தலைவராவார்.கட்சியின் கொள்கைக்கு அமையவும், யாப்புக்கு அமையவும் மைத்திரிபால சிறிசேனவே கட்சியை தலைமைதாங்க முடியும்.
நாம் தோல்வியடைந்த கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு மகிந்த ராஜபக்சவே தலைமை தாங்கினார். இந்த தேர்தலில் நாம் தோற்கவில்லை அவரால் தோற்கடிக்கப்பட்டோம். அதுவே உண்மை.
அவர் கட்சியை பலப்படுத்தாது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த சுதந்திரக்கட்சிஉறுப்பினர்களை தோற்கடிக்கவே பரப்புரை செய்தார். அதுவே நாம் தேர்தலில் தோல்வியை சந்திக்க காரணம்.” என்று தெரிவித்தார்.
இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, ‘ சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டும் செயற்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கட்சியின் மத்தியகுழு, மற்றும் கட்சியின் கொள்கைக்கு அமைய கட்சியை விமர்சிப்போர் கட்சியின் தலைவரை விமர்சிப்போர் என அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்மையில் மகிந்த ராஜபக்ச, எமது தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவறாக விமர்சித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும். கட்சியில் உள்ள அனைவருக்கும் தீர்மானம் பொதுவானது” என்று குறிப்பிட்டார்.