முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாம்கள் அகற்றப்போவதில்லை!
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து, சிறிலங்கா இராணுவத்தினரின் எந்த முகாம்களும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்று யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் தென்பகுதி ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு மேற்கொண்டிருந்த நல்லெண்ணப்ப பயணத்தின் போது, யாழ். படைகளின் தலைமையகத்தில் அவர்களைச் சந்தித்து உரையாடிய போதே, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், “யாழ்ப்பாணக் குடாநாட்டில், எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது. தீவிரவாதம் மீண்டும் தலையெடுப்பதற்கு, படையினர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.
நாங்கள் வெற்றி பெற்ற இராணுவம். சில அரசியல்வாதிகள் கூறுவது போன்றோ, சமூக ஊடகங்களில் பரப்புரை செய்யப்படுவது போன்றோ, யாழ். குடாநாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
2009ஆம் ஆண்டில் இருந்து போர் இல்லாத போது, சில காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதில் தவறு இல்லை.
ஆனாலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருக்கும் எந்தவொரு இராணுவ முகாமையும் நாம் விலக்கிக் கொள்ளவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.