Breaking News

இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயப்படும் - சம்பிக்க

இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயப்படுமென்றும் தவறு இடம்பெற்றிருப்பின் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமென்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, யாழில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

‘காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கிய சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஒருபோதும் வீணாகாது. அதேநேரத்தில் எக்காரணம் கொண்டும் இராணுவத்தினரை தண்டிக்க இடமளிக்கப்பட மாட்டாது.

யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு, தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இதுவரை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற சாட்சியங்களில், காணாமல் போனோர் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடயமே அதிகமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆராய்ந்து, எங்கேனும் தவறு இடம்பெற்றிருந்தால், அதுகுறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

அதேநேரம் புலிகள் தரப்பினாலும் தமிழ் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்தும் கவனம் செலுத்தப்படும். நாட்டை காத்த இராணுவ வீரர்களை தண்டிக்க முடியாது என்ற நிலைப்பாட்டினைப் போன்று, அரசாங்கத்தை நம்பியுள்ள மக்களுக்கும் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்’ என்றார்.