Breaking News

ஜெனீவா அமர்வில் ஸ்ரீலங்கா தொடர்பில் பேசுவதை தவிர்த்த அல் ஹுசைன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் முதலாவது அமர்வின்போது உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் ஸ்ரீலங்காவிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் எந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை.

செயிட் அல் ஹுசேன் தனது நீண்ட உரையில் ஸ்ரீலங்காவிற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாகவும் ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலை குறித்தும் குறுகிய விளக்கத்தை அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டபோதும் அவர் எதனையும் குறிப்பிடவில்லை.

எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு எந்தவொரு தினமும் நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் இதுவரை ஒதுக்கப்படவில்லை.

கடந்த பெப்ரவரி மாதத்தின் ஆரம்ப பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்திருந்தார்.அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்த் தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

தனது விஜயத்தை முடித்துக்கொண்டு கருத்து வெளியிட்டிருந்த அல் ஹுசைன், வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பது ஸ்ரீலங்காவின் இறைமை தொடர்பான முடிவாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் ஸ்ரீலங்காவின் நீதிக்கட்டமைப்பு குறித்து இருந்த சந்தேகம், நாட்டிற்கான விஜயத்தின் பின்னர் ஓரளவு தீர்ந்துவிட்டதாகவும், ஆனாலும் கடந்தகால விமர்சனங்களின் அடிப்படையில் நீதிக்கட்டமைப்பை முழுமையாக நம்பமுடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.a