காணிகளை விரைவாக ஒப்படைக்க வலியுறுத்துகிறது அமெரிக்கா
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ள அமெரிக்கா, இலங்கை படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
வொசிங்டனில் கடந்த மாதம் 26ஆம் நாள் நடந்த முதலாவது இலங்கை- அமெரிக்க கூட்டு கலந்துரையாடல் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும், இலங்கை வெளிவிவகார அமைச்சும் இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச்செயலர் தொமஸ் சானொன் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகளுக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது,
இதில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர்களாள நிஷா பிஸ்வால், ரொம் மாலினோவ்ஸ்கி, இலங்கைக்கான தூதுவர் அதுல் கெசாப், இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள், பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, அரசாட்சி, அபிவிருத்தி ஒத்துழைப்பு. மக்களிடையிலான உறவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டிருந்தது.
இதன்போது. ஜனநாயகம், ஜனநாயக நடைமுறைகள், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, நீதி, நல்லிணக்கம், நாடாளுமன்ற செயல்முறைகளை வலுப்படுத்தும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது என்று சிறிலங்கா பிரதிநிதிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியது, ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இணங்கியது உள்ளிட்ட சில பரப்புகளில் சிறிலங்காவில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று அமெரிக்கா வரவேற்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
மக்களுடன் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இல்ஙகை அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான சட்டம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சிகளை அமெரிக்கா வரவேற்கிறது.
காணிகளை உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டிய அமெரிக்கா எஞ்சியுள்ள காணிகளையும் விரைவாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடற்கொள்ளை எதிர்ப்பு, மனிதாபிமான உதவிகளை வழங்கல், அனர்த்த மீட்பு, பிராந்தியத்தில் கப்பல் பயண வழிகளின் பாதுகாப்பு சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் போன்றவற்றுக்காக இருநாடுகளும், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளன.
போருக்குப் பிந்திய தேவைகளை ஈடு செய்யும் வகையில் இலங்கை மேற்கொள்ளும் பாதுகாப்புத்துறை மறுச்சீரமைப்புக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்.” என்றும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது அமெரிக்க – இலங்கை கூட்டு கலந்துரையாடல், அடுத்த ஆண்டு கொழும்பில் நடத்தப்படும் என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.