புதிய அரசாலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா?
தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்களா? என்ற ஐயம் தோன்றுமளவுக்கு அண்மைக் காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களது கருத்துக்களும் உரைகளும் அமைந்து காணப்படுகின்றன என்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலமைச்சர்களின் 32 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பின்வரும் கருத்தொன்றை தெளிவாகக் கூறியிருந்தார். ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தைப் பரவலாக்கி ஒரே நாடு என்ற சித்தார்ந்தத்தில் நாம் அனைவரும் இணைந்து எமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வோம் என ஜனாதிபதி அழுத்தமாகக் கூறியிருந்தார்.
ஜனாதிபதியின் இக்கருத்தானது மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் எதைக்கூறுகின்றதென்றால் சமஷ்டியென்ற ஆட்சிமுறைக்கு நாம் செல்லப்போவதில்லை. ஒற்றையாட்சியின் கீழ் எவ்வாறு அதிகாரத்தை மேலும் பரவலாக்குவது பலப்படுத்துவது. தற்போது புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் முயற்சிகளை மேற்கொண்டு இதன்போது மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்குவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதி சூளுரைத்துள்ளார்.
ஒற்றையாட்சி முறைக்குள் உள்ளடங்கிய தீர்வொன்றையே நாங்கள் கொண்டுவருவோம் என்ற கருத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தான் பிரதமராக பதவியேற்ற காலத்திலிருந்து பகிரங்கமாக கூறிவந்திருக்கிறார்.
இதுவரை நாளும் சமஷ்டி முறை பற்றியோ மாகாண அதிகாரப்பரவலாக்கம் பற்றியோ வெளிப்படையாக வாய் திறந்து கூறாத ஜனாதிபதி மேற்படி மகாநாட்டில் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வெளிப்படுத்தலின் மூலம் அவர் தமிழ் மக்களுக்கும் கூட்டமைப்புக்கும் ஏனைய தமிழ்த் தரப்பினருக்கும் விடுத்திருக்கும் அல்லது தெரிவித்திருக்கும் செய்திகள் என்னவென்றால் சமஷ்டி முறைக்கு நாம் எக்காரணம் கொண்டும் செல்லப் போவதில்லையென்பதே இன்னொரு செய்தி. மாகாண சபை முறைகளினூடாகவே அதிகாரங்கள் பரவலாக்கப்படுமென்ற முடிவான செய்தியை பூடகமாக வெளியிட்டிருக்கிறார்.
இத்தகைய கருத்துக்களும் செய்திகளும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சந்தேகங்களையும் சஞ்சலங்களையும் உண்டாக்கி வருவதுடன் மீண்டும் ஏமாறப் போகின்றோமா என்ற ஐயப்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என புத்திஜீவிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நல்லாட்சியின் காரணகர்த்தா என்று கூறப்படுகின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போதும் அடக்கி வாசித்து விட்டு தற்பொழுது இதுதான் தீர்வாக முடியுமென ஆவேசத்துடன் கூறிவருகிறார்.
மஹிந்த ராஜபக் ஷ காலத்திலேயே 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்றாலும் நாம் ஏற்கப் போவதில்லை சுயநிர்ணயத்தை அனுபவிக்கக்கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றையே நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்று கூறிவந்த தமிழ் தலைமைகள் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவரவேண்டுமென கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டதை அனைவரும் அறிவர்.
அவ்வாறான சந்தர்ப்பங்களிலெல்லாம் ஒற்றையாட்சி முறையிலான அரசியல் அதிகாரப்பகிர்வையே எம்மால் தரமுடியுமென பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ வடக்கு கிழக்கு தமிழர்களிடம் கூறி வாக்குக் கேட்டிருப்பார்களேயானால் சிலவேளைகளில் நல்லாட்சிக்கான வித்து இடப்படாமல் இருந்திருக்கலாம்.
தமிழ் மக்களின் ஆறு தசாப்த காலப்போராட்டமானது ஒற்றையாட்சி முறையிலான தீர்வொன்றை இனப்பிரச்சினைக்கான தீர்வாக பெறமுடியுமென அவர்கள் நம்பியிருப்பார்களேயானால் அன்றைய அகிம்சை போராட்டம் தொட்டு ஆயுதப் போராட்டத்தினூடாக வெளிக்கொண்டுவரப்பட்டுள்ள ராஜதந்திரப் போராட்டம் தற்போதைய நல்லாட்சிப் போராட்டம் வரை அர்த்தமற்ற போராட்டமாகவே நினைக்கப்பட வேண்டும்.
ஒற்றையாட்சி முறையொன்றினூடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியுமென அன்றைய தலைவர்களும் இன்றைய தலைவர்களும் நம்பியிருப்பார்களேயானால் சோல்பரி யாப்பை அதன் பின்னேவந்த குடியரசு யாப்பை மீண்டும் வரையப்பட்ட ஜே.ஆரின் சோசலிச யாப்பை விமர்சிக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது.
பழைய குருடி கதவைத் திறவடி என்பதுபோல் இனப்பிரச்சினைக்கான தீர்வை புதிய அரசியல் யாப்பின் மூலம் கொண்டுவர முடியும். இந்த நாட்டுக்கென வரையப்படவேண்டிய யாப்பானது எவ்வகை முறையும் அதிகாரப் பகிர்வு கொண்டதாக இருக்க வேண்டுமென்ற மக்கள் கருத்துக் கோரலையோ ஆலோசனையையோ பெறவேண்டிய தேவை ஏன் எழ வேண்டுமென்ற கேள்வி எழுந்து நிற்கிறது எனப் பேசப்படுகிறது.
அண்மையில் நாடு பூராகவும் சென்று புதிய யாப்புக்கான மக்கள் மற்றும் புத்திஜீவிகள் அரசியல் தலைவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுவந்த குழுவினரிடம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் இரண்டு விடயங்களை வலியுறுத்தி கூறியிருந்தார்கள். ஒன்று நீண்டகால அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் சமஷ்டி முறையிலான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். மற்றது தமிழர் தாயகமென அடையாளப்படுத்தப்படும் வகையில்
வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்ற கருத்தை ஏக முடிவாகக் கூறியிருந்தார்கள். இதற்கு மாற்றுக் கருத்து இருக்கவில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் வாழ்ந்து கொண்டு எந்த சேதாரமும் இல்லாத ஒரு சிலர் ஒரு சில அமைப்புக்கள் சுயநலப்பாங்காக இந்த கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து முன்வைத்தது முண்டு.
தமிழ் மக்களை குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் பேரவை என்ற கட்சிகளாயினும் சரி அமைப்புக்களாயினும் சரி இவ்விரு கோட்பாடுகளிலிருந்து அவர்கள் விலத்திச் செல்லவில்லையென்பது தெளிவு நிலையான உண்மை.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நீண்டகால இலக்கிலிருந்து எக்காரணம் கொண்டும் விலத்திச் செல்லமுடியாத அளவுக்கு மக்களின் அழுத்தங்களும் அபிலாஷைகளும் பின்னணி வகிக்கின்றன என்பது யதார்த்தம். ஒற்றையாட்சி முறையொன்றின் கீழேயே அரசியல் தீர்வு வழங்கப்படும் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெருக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டமுடியுமென ஜனாதிபதியும் பிரதமரும் கூறிக் கொண்டுவருவதன் முழு அர்த்தப்பாடுகளையும் எவ்வாறு மதிப்பீடு செய்ய முடியுமென்பதே தமிழ் மக்கள் இன்று சஞ்சலப்படுவதற்கான காரணமாகப் பார்க்கப்படவேண்டும்.
ஒற்றையாட்சி முறையொன்றின் கீழ் அரசியல் தீர்வும் அதிகாரப்பகிர்வும் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் இப்பொழுது நடைமுறையிலுள்ள அரசியல் சாசனமானது போதுமான வலிமைத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. வெறுமனையே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்துக்கொள்வதற்காகவும் தேர்தல் முறையில் மாற்ற முறைமையை உண்டாக்குவதற்காகவும் பாராளுமன்றை அதிகார செறிவுடையதாக மாற்றுவதற்காகவும் புதிய அரசியல் சாசனம் கொண்டுவரப்படுகிறதெனில் சிறுபான்மை சமூகத்தின் நலன் சார்ந்த விடயத்துக்காக புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லையா என்ற கேள்வி எழுகின்றது. அதுவுமன்றி அவசரம் அவசரமாக கருத்துக் கோரல் ஏன் தேவைப்படுகிறது? என்பது புரியாத விடயமாகவேயுள்ளது.
கூட்டமைப்பைப் பொறுத்தவரை அவர்களால் முன்வைக்கப்பட்டு வந்த விடயம் யாதெனில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டுமாயின் சமஷ்டி முறையிலான தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும். சமஷ்டியென்ற வார்த்தைப் பிரயோகம் தெற்கில் வாழுகின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்குமாயின் அதாவது தெற்கிலுள்ள மக்களுக்கு அச்சத்தைத் தருமாயின் அதற்கு மாற்றீடான மொழிப்பிரயோகமோ அல்லது ஆட்சி முறையை முன்வையுங்கள் என்று கூறிவருகின்றார்கள். அவர்கள் தமது கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முறையில் இவற்றையும் கூறிவருகிறார்கள்.
சமஷ்டி கோருவதனால் நாடு அச்சம் கொள்ள வேண்டியதில்லை. பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் சுயாட்சி முறையிலான தீர்வு முறையையே நாம் கோரி நிற்கின்றோம். எமது கோரிக்கையினை அனைத்து சமூகமும் முரண்படாத வகையில் அங்கீகரித்து நீண்ட சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட வழிசமைத்துத் தாருங்களென்றே கூறி வருகின்றார்கள்.
நாங்கள் ஈழம் என்ற கோரிக்கையை கைவிட்டு விட்டோம். நாடு பிளவுபடுவதை விரும்பவில்லை. அனைத்து சமூகத்துடனும் ஒற்றுமையாகவே வாழ விரும்புகின்றோம். ஆனால் எமது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். சுயாட்சி வலிமை கொண்ட தீர்வை பெற விரும்புகின்றோமென வலியுறுத்திவருவது யாவரும் அறிந்த உண்மை. அது மட்டுமன்றி சர்வதேச தலைவர்களையோ தூதுவர்களையோ ராஜதந்திரிகளையோ சந்திக்கின்ற வேளைகளிலெல்லாம் அவர்கள் இதையே வலியுறுத்தி வருகிறார்கள். வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டு கூறிவருவதுமுண்டு.
த.தே.கூ. அமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மைக்காலமாக கூறிவருகின்ற இன்னுமொருவிடயம் இவ்வருட இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கொண்டுவரப்பட வேண்டும். அப்பொழுதான் மீள்குடியேற்றம், மறுவாழ்வு, அரசியல் கைதிகள் விவகாரம் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் சமூக மற்றும் வேலையற்றோர் பிரச்சினைக்கு விரைவானதும் உறுதியானதுமான முடிவுகளையும் காண முடியும். தவறும் பட்சத்தில் எல்லாமே சூனியமாகிவிடுமென சம்பந்தன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கூறிவருவதை அவதானிக்கின்றோம்.
மாகாண சபை முறையொன்றின் அதிகாரச்செறிவை வலுவடைய வைப்பதன் மூலம் இவையெல்லாவற்றையும் அடைந்து விடலாமென்ற நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்பட்ட விடயமாக இதை அர்த்தம் கொள்ள முடியாது. இவையெல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு நீண்ட பயணம் உள்ளது என்பதே அதன் முழுமையான கருத்தாக நம்பப்படவேண்டும்.
மாகாணசபை அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலமும் பலப்படுத்துவதன் மூலமும் நாட்டின் இனப்பிரச்சினைக்கோ தேசியப் பிரச்சினைக்கோ தீர்வு கண்டுவிடலாமென அரசாங்கம் நினைக்குமாக இருந்தால் அதை எந்தளவுக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் சாத்தியமாகுமா என்ற கேள்வி எழுந்து நிற்கின்றது.
மாகாணசபை முறையொன்று இனப்பிரச்சினைக்கான தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இதன்மீது நம்பிக்கை கொண்டவர்களாக தமிழ் மக்களும் காணப்படவில்லை. மிதவாதக் கட்சிகளும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவினால் வலிந்து புகுத்தப்பட்ட இம்முறையை விடுதலை இயக்கங்களும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. ஏற்றுக்கொண்டதாக நம்பப்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார்கள்.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு அதன் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட வரத ராஜப்பெருமாள், அதன் பின்னே கிழக்கு பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாண முதல் அமைச்சராக ஆக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போதைய கிழக்கின் முதல் அமைச்சர் நஸீர் அஹமட் வரை மாகாண சபைகளின் அதிகாரங்கள் வலிதாக்கப்படவேண்டும். பரவலாக்கப்படவேண்டுமென்ற கருத்தை முன்வைத்து வந்துள்ளார்கள். இவற்றுக்கு மேலாக
வடமாகாண முதல் அமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தான் பதவியேற்ற காலத்திலிருந்து அதிகாரப் பரவலாக்கல் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளார். தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றார்.
இவையொரு புறமிருக்க மாகாண சபைகளின் அதிகாரப் போக்குப் பற்றி அண்மையில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தற்போதைக்கு மாகாண சபைகள் வெள்ளையானையென்றே வர்ணிக்கப்படுகிறது. மாகாண சபைகளின் எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாமல் உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மீது புதிய அரசியல் அமைப்பில் கவனம் செலுத்தப்படும்.
ஒவ்வொரு அமைச்சரும் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களும் மாகாணசபை முறை பற்றியும் அதன் அதிகாரப் பலவீனங்கள் பற்றியும் சாடியும் விமர்சித்து வந்தாலும் உள்ளொன்று வைத்து புறத்தேயொன்றை பேசுகின்றவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
மாகாணசபை முறைமையின் அதிகாரங்களும் வலுவும் பலப்படுத்தப்படவேண்டுமாயின் பல்வேறு துறைகளில் அது பலப்படுத்தப்படவேண்டுமென்ற கருத்து கூறப்பட்டு வருகின்றதே தவிர அதை நடைமுறைக்கு கொண்டுவர யாரும் துணிவு கொள்ளவில்லை. உதாரணமாக பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் சம்பந்தமாக கடந்த 27 வருடங்களாக பேசப்பட்டு வந்திருக்கிறது. ஜே.ஆர். அதன் பின்னே பிரேமதாஸ, சந்திரிகா, மஹிந்த ராஜபக்ஷ என எல்லா ஜனாதிபதிகளாலும் நடப்பு ரீதியாக இவ்விரு அதிகாரங்கள் பற்றி பேச்சளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும் நடைமுறையில் அவர்கள் அமுல்படுத்துவதற்கு காட்டி வருகின்ற தயக்கமும் தாமதமும் அறியப்பட்ட விடயமே. இவ்விரு அதிகாரங்களையும் வழங்குவதன் மூலம் அது வட கிழக்கில் தனி ராஜ்ஜியத்துக்கு இட்டுச் சென்று விடும் மத்திய அரசின் அதிகார வாண்மை பலவீனப்படுத்தப்பட்டுவிடும். நினைத்த குடியேற்றங்களையோ சுவீகரிப்புக்களையோ மத்திய அரசு செய்ய முடியாமல் போய்விடுமென்ற உள்நோக்கம் கருதியும் தமது ஆட்சிக்கு ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றியும் கருதியே செய்யாமல் இருந்துள்ளார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் இனவாதத்தை முறியடித்து அரசியல் தீர்வை முன்வைப்போம் என்று அரசு சார்ந்த ஒருசாராரும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை எதிர்பார்க்க முடியாது என இன்னொரு சாராரும் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் ஒற்றையாட்சி முறையினூடாக மாகாணங்களுக்கு அதிகாரம் ஒற்றையாட்சி எவ்வாறு பரவலாக்குவது வலுப்படுத்துவது என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என பிரதமரும் ஜனாதிபதியும் கூறிவருகிறார்கள்.
இத்தகையதொரு கருத்தும் முன்னெடுப்புக்களும் தமிழ் மக்கள் மத்தியில் சஞ்சலத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னைய அரசாங்கங்களினால் எல்லாக் காலத்திலும் ஏமாற்றப்பட்டதைப் போல் மீண்டும் ஒரு ஏமாற்றத்தை நோக்கி தமிழ் மக்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். என்னதான் முடிவை நாம் சந்திக்கப் போகிறோமென்ற சந்தேகங்களே அவர்களை மீண்டும் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது.