அரசியல் கைதிகள் புனர்வாழ்வு பெறத்தயார்! - டெனீஸ்வரன்
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தாங்கள் புனர்வாழ்வு பெறத்தயாராக இருப்பதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் தெரிவித்துள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) மகசின் மற்றும் வெலிக்கடைச் சிறைகளில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திப்பதற்காக அமைச்சர் அங்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே, கைதிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், போராட்டத்தில் சம்பந்தப்படாத சிலர், தமக்கு புனர்வாழ்வு தேவையில்லை என்றும் தாம் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சந்திப்பின்போது, உண்ணாவிரதக் கைதிகள் அமைச்சரிடம் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சில அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல் கைதிகள் புனர்வாழ்விற்கு செல்ல விரும்பவில்லை என்ற கருத்துப்பட ஜனாதிபதியிடம் கூறியிருக்கின்றார்கள்.
ஆனால், உண்மை நிலை அதுவல்ல. இந்த உண்மை நிலைப்பாட்டினை உரிய இடத்திற்கு கொண்டு செல்லுமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடயங்கள் பொருத்தமான நடவடிக்கைகளின் ஊடாக விரைவாகக் கையாளப்படவேண்டும் என்றும், விரைவாக குடும்பங்களுடன் மீள இணைக்கப்பட்டு, இயல்பு வாழ்விற்கு திரும்புவது அவசியமானதொன்றென்றும் தெரிவித்தார்.
ஆயுதப் போராட்டத்தோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத ஒரு சிலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு பொது மன்னிப்போ, புனர்வாழ்வோ அல்லது பிணையோ பொருத்தமற்ற ஒன்றாக காணப்படுவதோடு, இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் என்பதனையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது வெலிக்கடை, அனுராதபுரம், வவுனியா ஆகிய சிறைகளில் இருக்கும் 04 பெண் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள் என்ற அடிப்படையில் மிக விரைவாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி அனுராதபுரம், மகசின், வெலிக்கடை ஆகிய சிறைகளில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகள் சிலர் தங்களது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
அனுராதபுரச் சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட்டிருக்கும் அதேவேளையில், மகசின் சிறைச்சாலையிலும், வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் 14 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக தமது உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.