Breaking News

சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரியுள்ள ஈழத்தமிழர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்

சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரிச்சென்றிருக்கும் ஈழத்தமிழர்கள் வெகுவிரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக சுவிஸ் அகதிகள் சபையை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்காவில் இடம்பெற்றுவரும் நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டு வெளிவவிகார அமைச்சரிடம் தெரிவுபடுத்தியுள்ளார்.

இதனையடுத்தே சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தமது நாட்டில் புகலிடம் கோரியுள்ள ஈழத்தமிழர்கள் வெகுவிரைவில் நாடு கடத்தப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரியிருக்கும் ஈழத்  தமிழர்களை நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுவிஸ் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தார்.

நாடு திரும்புகின்றவர்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.கடந்த 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டு வரையான காலப்பகுதியில் சுவிட்ஸர்லாந்து வெளிவிவகாரப் பிரிவு ஸ்ரீலங்காவில் தடை செய்யப்பட்டு இருந்ததுடன், பல சிக்கல்களையும் எதிர்நோக்கியிருந்தது.

2015ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் புதிய ஆட்சியாளர்களின் வருகையின் பின்னர் இவ்வமைப்பினது தடை தகர்க்கப்பட்டதுடன், சுயாதீனமாக இயங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையில் யுத்த காலத்திலும், அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் உயிர் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு தரப்பினரது அச்சுறுத்தல் போன்ற விடயங்களினால் சுமார் 50 ஆயிரம் பேர் சுவிட்ஸர்லாந்தில் புகலிடம்கோரிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.