Breaking News

ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்த ஊடகவியலாளருக்கு அநீதி - யாழில் ஆர்ப்பாட்டம்



ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த ‘இன்னர் சிட்டி பிரெஸ்’ என்ற இணைய ஊடகத்தை நடத்திவந்த மாத்தியூ லீ விற்கு ஐ.நா வளாகத்திற்கு உள்ளேயே நிகழ்ந்த மனித உரிமை மீறலை கண்டித்து இன்று யாழில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில், காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, நல்லூரிலிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், ஐ.நா. அலுவலகம்வரை சென்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் கையளிக்கும் வகையிலான மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க முற்பட்டுள்ளனர். ஆனால், யாழில் உள்ள அலுவலகம் இயங்கவில்லை எனவும், மகஜர் கையளிப்பதாயின் கொழும்பு அலுவலகத்திற்கு சென்றே கையளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘இயங்காத நிலையில் அலுவலகம் ஒன்று இங்கு தேவையில்லை’ என கோஷமிட்டதுடன், மகஜரை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும், தொடர்ந்து மகஜரை கையளிக்க போராடிய போதும் அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ள முன்வராத நிலையில், மகஜரை தொலைநகல் மூலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப் போவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் அமெரிக்காவிற்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் உலகறியச் செய்தவர்களுள் மாத்தியூ லீ மிகவும் முக்கியமானவராவார். இவருக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக ஐ.நா.வில் அலுவலகம் வழங்கப்பட்டிருந்தது. உள்ளகத் தகவல்களைச் சேகரிப்பதற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த மாதம் 19ஆம் திகதி ஐ.நா. விலுள்ள அவரது அலுவலகம் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் முற்றுகையிடப்பட்டு அவரது ஆவணங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டதுடன், மாத்தியூவின் அடையாள அட்டையைப் பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.