மகிந்த ஆட்சிக்கால ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் செயலர் திடீரென பதவி நீக்கம்
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலர் பதவியில் இருந்து லசிலி டி சில்வா திடீரென நீக்கப்பட்டுள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் நேற்று இந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுபற்றி, ஜனாதிபதியின் செயலர் பி.பி.அபயகோன் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.
லசிலி டி சில்வாவுக்குப் பதிலாக காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் செயலர் எச்.டிபிள்யூ.குணதாச, இந்த ஆணைக்குழுவின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
அதேவேளை தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக இருப்பதாகவும், பக்கசார்பின்றியும், நடுநிலையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், கடுமையாக உழைத்த தமக்கு கிடைத்த பரிசாக இதனை எடுத்துக் கொள்வதாகவும் லசிலி டி சில்வா தெரிவித்துள்ளார்.