Breaking News

FCID விசாரணை: ஷிரந்தியை பின்பற்றும் நிரூபமா?

விசாரணை மேற்கொள்ளும் முகமாக முன்னாள் பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்சவுக்கு நிதி குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. எனினும் அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு செல்லாமல் வேறு வழியில் வாக்குமூலத்தை அளிப்பதற்கான வாய்ப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொண்டதனை போன்று, வேறு பிரபலம் ஒருவரின் வீட்டில் விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு நிரூபமா ராஜபக்ச கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் ஊடகவியலாளர் சந்திப்பில் சுமனதாஸ ஊடாக ராஜபக்சர்களின் ரகசியங்களை வெளியிட்ட தகவல் தொடர்பிலே நிரூபமா ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள மல்வான மாளிகை நிரூபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திரு நடேசனுடையதென சுமனதாஸ தெரிவித்திருந்தார்.

மல்வானை மாளிகையை கட்டுவதற்காக பூஜை வழிபாடுகள் தன்னால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நிரூபமா ராஜபக்ச குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.