சம்பூரில் அனல் மின் நிலையம் வேண்டாம்! பணிகளை நிறுத்தக் கோரி அடையாள உண்ணாவிரதம்
சம்பூர் அனல் மின் நிலையப் பணிகளை இடைநிறுத்தக் கோரி இன்று (புதன்கிழமை) அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பசுமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலை கட்டைப்பறிச்சான் சாலையூரில் நடைபெற்று வருகின்றது.சம்பூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு, இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி அவ்விடத்திற்கு வருகைத் தந்து சென்றுள்ளார்.திருகோணமலை, சீதனவெளி என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெறுகின்றது.
இந்த அடிக்கல் நாட்டும் விழாவிற்கு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் வருகைத் தந்துள்ள நிலையில், அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.