வித்தியா படுகொலை மேலும் இருவர் கைது
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பில் இருந்து வந்திருந்த விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
கைதான இருவரும் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் வித்தியா படுகொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுடன் இவர்கள் தொலைபேசி தொடர்புகளைக் கொண்டிருந்தமை நிருபிக்கப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அத்துடன் வித்தியா படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கைகள் எதனையும் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்படாத நிலையில் அடுத்து விசாரணையின்போது மரபணுப் பரிசோதனை உள்ளிட்ட அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் படுகொலை இடம்பெற்று சுமார் 9 மாதங்கள் கடந்த நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.