Breaking News

அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினருக்குப் பயிற்சி

கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் புளூரிட்ஜ்ஜில், இலங்கை கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

யுஎஸ்எஸ் புளூரிட்ஜ் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் வந்த அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியின் தலைமை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின், நேற்று பிற்பகல் இலங்கை கடற்படைத் தலைமையகத்துக்குச் சென்று, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

வரும் 31ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

ஆயுதங்களைக் கையாளுதல், சேதங்களைக் கட்டுப்படுத்தல், இளநிலை அதிகாரிகளுக்கான பரிமாற்றப் பயிற்சிகள், மேலதிக நகர்ப்புறச் சண்டைப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டுப் பயிற்சிகளிலும், இருநாட்டுக் கடற்படையினரும் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன், வரும் 31ஆம் நாள் அமெரிக்கப் போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, இலங்கை கடற்படையினருடன் கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்ட பின்னரே தமது பயணத்தை தொடரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.