மைத்திரி – மங்களவுக்கிடையில் முறுகல்!
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அவ்வூடகத்தில் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவிக்கும்போது எந்தவொரு வெளிநாடுகளின் பங்களிப்பையும் தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும், உள்நாட்டுப் பொறிமுறையிலேயே விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
ஆனால், அண்மையில் அமெரிக்காவில் வோசிங்ரனில் உள்ள அமைதிக் காப்பகத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றும்போது போர்க்குற்ற விசாரணையில் எந்தவொரு வெளிநாட்டு அமைப்புக்களோ அல்லது தனிநபர்களோ பங்குபற்றமுடியுமெனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துத் தொடர்பில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கையில் அது மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட கருத்து எனவும் அது அரசாங்கத்தின் கருத்தில்லை எனவும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் தற்போது இருவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் மங்கள சமரவீர புறக்கணிக்கப்பட்டு வருவதோடு அவருக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டே இந்தப் பொறுப்பான பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.