Breaking News

வெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை மூடப்பட்டது!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின், கடத்தல்களுடன் தொடர்புடைய தடயங்களைக் கொண்டிருக்கும், வெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் முன்பாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

கடத்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான வாகனங்கள், பாகம் பாகமாக பிரிக்கப்பட்டு, இந்த இரகசிய அறைக்கும் போடப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் இந்த அறையை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி,

“வத்தளை பகுதியில் வைத்து கடத்தப்பட்ட ஜோன் ரீட் என்பவர், கடத்தப்படும் போது பயணித்துக் கொண்டிருந்த டொயாடோ ரக வான் தொடர்பாக நாம் முன்னெடுத்த விசாரணைகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

முதலில் இந்த வான் திருகோணமலை கடற்படை தளத்தில் இயந்திரம், அடிச்சட்ட இலக்கங்கள் மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுவது குறித்து எமக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த போதே வெலிசறை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய அறை குறித்த தகவல்களை அறிய முடிந்தது.

இதனையடுத்து வெலிசறை கடற்படை முகாமுக்கு சென்ற நாம் அங்குள்ள குறித்த இரகசிய அறையை பார்த்தோம். அதில் உந்துருளிகள், டொயாடோ ரக வான் மற்றும் கடத்தப்பட்ட மேலும் சிலர் பயணித்த வாகனங்களினது என நம்பப்படும் வாகனங்கள் பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டன.

அந்த அறையில் 72 வாகன உதிரிப்பாகங்கள் உள்ளன. அந்த அறையை நாம் தற்போது முத்திரையிட்டு மூடி வைத்துள்ளோம்.அந்த வாகன பாகங்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் குறித்த இரகசிய அறையில் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த வாகன பாகங்கள் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை நாம் எதிர்பார்க்கிறோம். இந்த வாகன பாகங்களை அடுத்த வாரம் அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.