Breaking News

மீனவர் பிரச்சினை தொடர்பில் மே மாதம் பேச்சுவார்த்தை - சுஸ்மா

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாட்டு மீன்பிடி அமைச்சர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமையினால் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொறி முறை ஒன்றை உருவாக்க முடியும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 35 தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அத்துடன் தமிழக மீனவர்கள் பாரம்பரமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றமை துரதிஸ்டமானது.




இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.