வலி. வடக்கு நிலங்களை விடுவிக்க கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
உயர் பாதுகாப்பு வலயமாகவுள்ள யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலுள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி 32 நலன்புரி முகாம்களை சேர்ந்த மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதன்படி கண்ணகி நலன்புரி முகாமில் உள்ள மக்கள் தமது முதல்நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கவுள்ளனர்.
கடந்த யுத்த காலங்களில் உயர்பாதுகாப்பு வலயமான வலி.வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 32 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களுடைய பிரச்சனைகளுக்கு ஆறு மாத காலத்துள் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இக்காலப்பகுதியில் மக்களின் காணிகளை சுவீகரித்து விமானநிலைய மற்றும் துறைமுக விஸ்தரிப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு மக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்திருந்த போதிலும், இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் ஜனாதிபதியின் வாக்குறுதி மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து தமது மீள்குடியேற்றம் தொடர்பில், சுன்னாகம் சபாபதிபிள்ளை நலன்புரி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது 32 முகாம்களிலும் தொடர்ச்சியான உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு, முதல் உண்ணாவிரதப் போராட்டம் இன்று கண்ணகி நலன்புரி முகாமில் இடம்பெறவுள்ளது.
காணிகளை விடுவிக்குமாறு கோரி இடம்பெறவுள்ள இந்த அகிம்சை வழி போராட்டமானது எந்த கட்சிசார்பற்ற நிலையில், இதற்கு அனைத்து கட்சிகள் புலம்பெயர் உறவுகள், பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் ஆகியோரது ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக நலன்புரி நிலையங்களின் பொது நிர்வாகம் தெரிவித்துள்ளது.