Breaking News

தள்ளாடுகிறது பொருளாதாரம் – இன்று அவசர அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து ஆராயவே இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அத்துடன், முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்கள் தொடர்பாகவும், இந்தக் கடன்களை நீண்டகால, குறுகிய கால அடிப்படையில் மீளச் செலுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தகவல் வெளியிட்ட பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா,“பொருளாதார நிலைமைகள் குறித்து பேச அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றைக் கூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் அச்சமூட்டுவதாக இருக்கிறது என்று கூற வேண்டியதில்லை. ஏனென்றால் அரசாங்கத்தின் திறைசேரி வெறுமையாக உள்ளது.அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் தொடர்பாக நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், உண்மையான நிலைமையை விரைவில் நாம் வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.பில்லியன் கணக்கான டொலர்களை நாம் கடன்களுக்கு செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.