நல்லிணக்கத்துக்கு தெற்கிலுள்ளவர்களின் மனோநிலை மாற வேண்டும் - ஜனாதிபதி
இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்க தென்பகுதியில் உள்ள மக்களின் மனோநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் எல்ஹாட்ஜ் அஸ் சை, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “வெளிநாட்டு அழுத்தங்களில் இருந்து நல்லிணக்கம் உருவாக முடியாது. மக்களிடம் இருந்தே நல்லிணக்கம் உருவாக வேண்டும்.நல்லிணக்கம் பற்றி பேசப்படும் போதெல்லாம் அனைத்துலக முகவரமைப்புகள் போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு சென்று மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கோருகின்றனர்.
கடந்த சுதந்திர நாளன்று தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு முடிவு செய்த போது மக்களில் கணிசமான பகுதியினரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. இதனால் தான், தெற்கிலுள்ள மக்களின் மனோநிலையில் மாற்றம் அவசியமாகிறது. தெற்கிலுள்ள மக்களின் மனோநிலையில் குறிப்பாக வயதானோரிடம் நல்லிணக்கத்துக்கான மாற்றம் ஏற்பட வேண்டும்.
இளம்தலைமுறையினரிடம் இந்த விடயத்தில் அவ்வளவாக ஆர்வமில்லை. அவர்கள் நல்லிணக்கத்துக்கு சாதகமாகவே உள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதன்போது கருத்து வெளியிட்ட அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் எல்ஹாட்ஜ் அஸ் சை,
“நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த போது, வியப்பான மாற்றங்களை காண முடிந்தது.அங்கு மக்களின் வாழ்க்கை முறையிலும் அணுகுமுறையிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அங்குள்ள மக்கள் குறிப்பாக இளையவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
முன்னாள் போர் வலயத்துக்கு மேற்கொண்ட பயணத்தின் போது கிடைத்த சாதகமான அனுபவங்கள் தொடர்பாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.