பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை எதிர்க்கவில்லை – என்கிறார் முதல்வர்
பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்துக்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதற்கு முழுமையாக இணங்குவதாகவும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
அண்மையில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதன் பின்னர், கருத்து வெளியிட்டிருந்த பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, வடக்கு மாகாண முதலமைச்சர் எதிர்ப்பை வெளியிட்டாலும், பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், இந்த விவிகாரம் குறித்து கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்-
“பலாலியை அண்டிய பகுதியே விவசாயத்துக்கு அவசியமான செம்பாட்டு மண்ணைக் கொண்ட செழிப்பான பிரதேசம். இங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.அவர்களின் மீள்குடியேற்றத்தின் பின்னர் எந்த அபிவிருத்தியையும் அங்கு முன்னெடுக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு.
பலாலி விமானநிலைய விரிவாக்கத்தக்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டு வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன.பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு நான் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எனது மக்களை அந்தப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்திய பின்னர் அதனை விரிவுபடுத்துங்கள் என்றே கோரியிருந்தேன்.
முதற்கட்டமாக பலாலி விமானநிலைய சுற்றயல் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர் தேவையானளவு விமான நிலையத்தை விரிவுபடுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். விமான நிலைய விஸ்தரிப்புக்கு நான் நூறுவீதம் இணங்குகின்றேன்.விமான நிலையமொன்றுக்கான அவசியம் இங்கு இருக்கிறது. பலாலி விமான நிலையத்தின் ஊடாக முன்னர் நான் பல தடவைகள் இந்தியா சென்று வந்தவன். இவ்வாறான நிலையில் விமான நிலைய அபிவிருத்திக்கு நானோ அல்லது வடமாகாண சபையோ முட்டுக்கட்டையாக இருக்கப் போவதில்லை.
மாறாக அபிவிருத்தி முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர் எனது மக்கள் அந்தப் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்பதே தமது தெளிவான நிலைப்பாடு.மீள்குடியேற்றத்தின் பின்னர் எந்த அபிவிருத்தியையும் செய்யலாம். அபிவிருத்திகளை மேற்கொள்ளும்போது கடற்பிரதேசத்தையும் விரிவாக்கி அதனையும் பயன்படுத்த முடியும். இது தொடர்பான ஆலோசனைகளையும் நாம் ஏற்கனவே இந்தியத் தரப்பிடம் வழங்கியுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.