அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்! சுவாமிநாதனிடம் செல்வம் கோரிக்கை
தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் சட்டமா அதிபரின் அறிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் அறிக்கையின் பிரகாரமே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று புதன்கிழமை மாலை மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போதே அமைச்சர் சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.குறித்த சந்திப்பு தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரப் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை அவருடைய அமைச்சில் சந்தித்தேன்.
இதன்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து பல்வேறு விடயங்களை அமைச்சரிடம் தெளிவுபடுத்தினேன்.தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட அனுமதிக்க முடியாது எனவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன்.
இதன்போது அரசியல் கைதிகள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் தாம் மேற்கொள்ளுவதாகவும், ஆனால் அரசியல் கைதிகள் அனைவரும் புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள சம்மதிப்பார்களா? என்பது தெரியாது என்றும் குறிப்பிட்டார்.
புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள சிலர் சம்மதிப்பதாகவும் சிலர் மறுப்புத் தெரிவிப்பதாகவும் இது தமக்கு பிரச்சினையாக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சகல அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வு வழங்கப்படும் என்ற முடிவை அரசியல் கைதிகளிடம் தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கு அவர்கள் சம்மதிப்பார்கள் என நான் அமைச்சரிடம் தெரிவித்தேன்.
அதனை விடுத்து அவர்களுக்கு உரிய பதில் எதனையும் கூறாது விட்டால் அவர்கள் இவ்வாறான முடிவுகளையே எடுக்க வேண்டியுள்ளது எனக் கூறினேன்.தமிழ் அரசியல் கைதிகள் இன்றுடன் 10 ஆவது நாளாக தமது உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
எனவே அவர்களின் விடுதலை குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிடம் அவசர வேண்டுகோளை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.