Breaking News

பிகாரில் காப்பியடித்தலைத் தடுக்க உள்ளாடையுடன் தேர்வு(காணொளி)

பிஹார் மாநிலத்தில் இராணுவத்திற்கான
ஆளெடுப்புத் தேர்வில் கொப்பியடித்தலைத் தடுப்பதற்காக தேர்வில் கலந்துகொள்ள வந்த இளைஞர்கள் உள்ளாடையுடன் தேர்வு எழுதவைக்கப்பட்டனர்.

முஸாஃபர்பூர் நகரில் நடந்த இந்தத் தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் உள்ளாடையுடன் இந்தத் தேர்வை எழுதினர்.எல்லோரையும் சோதனை செய்ய நேரம் பிடிக்கும் என்பதால், இப்படிச் செய்யப்பட்டதாக ராணுவம் தெரிவித்திருக்கிறது.

இது மிகக் கண்ணியக்குறைவாக இருந்ததாக அந்தத் தேர்வில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர் செய்தித்தாள் ஒன்றிடம் கூறினார்.இந்திய ராணுவத்தின் தரைப்படையில் சேர்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 1,159 பேர் கலந்துகொண்டனர்.


"சக்கர் மைதானத்திற்குள் தேர்வுக்காக நுழைந்தவுடன் உள்ளாடை தவிர பிற எல்லா ஆடைகளையும் அகற்றும்படி சொன்னார்கள். அப்படிச் செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை," என ஒரு தேர்வர் தெரிவித்தார்.இந்தச் சம்பவம், நிர்வாக ரீதியாக நடந்த ஒரு கவனக்குறைவு என மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிஹார் உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் தேர்வில் ஏமாற்றவது என்பது பரவலாக நடந்துவருகிறது.கடந்த ஆண்டு, பிஹாரில் நடந்த ஒரு தேர்வில் கலந்துகொண்டவர்களுக்கு உதவிசெய்வதற்காக அவர்களது உறவினர்களும் பெற்றோரும் சுவற்றில் ஏறும் படங்கள் வெளியாகி மாநில அரசுக்கு பெரும் சங்கடங்களை ஏற்படுத்தின.

இதையடுத்து, தேர்வில் ஏமாற்றுபவர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் போன்றவற்றை மாநில அரசு அறிவித்திருக்கிறது.