எட்வேர்ட்டை மனைவியே காட்டிக் கொடுத்தார்!
சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ளவரின் மனைவியே தகவல்களை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு-
மறவன்புலவில் நேற்றுமுன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருட்கள் சிக்கியதையடுத்து, வீட்டின் உரிமையாளர் தப்பிச் சென்றி்ருந்தார்.
அவரைப் பிடிப்பதற்காக, வன்னேரிக்குளம் பகுதியில் வீதித்தடைகளை பொலிஸார் அமைத்திருந்தனர். நேற்றுமதியம் அவர், அங்கு வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர், ரமேஸ் எனப்படும் எட்வேர்ட் ஜூலியன் (வயது 32) என்றும்,13 வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ரமேசின் இரண்டாவது மனைவியே, வெடிபொருட்கள் பற்றிய தகவலை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் ரமேஸ் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைப்பற்றப்பட்ட கிளைமோர்கள் பழைய காகிதத்தில் சுற்றப்பட்டிருந்தன. ஆனால், தற்கொலை அங்கி புதிதாக இருந்தது.
இந்த வெடிபொருட்களை சில நாட்களுக்கு முன்னரே, மன்னாரில் இருந்து ரமேஸ் அந்த வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார் அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்தே, அவரது இரண்டாவது மனைவி இதுபற்றிய பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.
ரமேஸ் முன்னர், மன்னாரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவர் என்றும் கூறப்படுகிறது.