தீர்வு கிடைக்கும்வரை ஓயமாட்டோம்! - சுமந்திரன்
இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என ஆட்சியாளர்களால் சொல்லப்படும் வரை நாம் ஓய்ந்து விடாமல் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்;
அம்பாறை மாவட்டத்தில் முதலில் இந்த நிகழ்வு ஏற்பாடாகி நடக்கின்றதையிட்டு பெருமையடைகிறேன், ஒரு சிலவிடயங்களை என்னால் பேச முடியாது. இந்தப்பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு நபர் குறித்த குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த குற்றவாளிக்கு சாட்சியமளித்த நபருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர் வெளிநாடு சென்றிருந்தார். அது முன்னர் இருந்த அரசின் அகோரம்.
ஆனால் இன்று அது மாறியிருக்கிறது, இன்று குறிப்பிட்ட அந்த நபருக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுக்கின்றீர்கள். இதுதான் நல்லாட்சி, காணாமல் போனவர்கள் குறித்து இந்த அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கிறது. காணாமல் போனவர்களின் பிரச்சினைகளை விடவும் முக்கிய ஒரு சில விடயங்கள் இன்னும் மீதமிருக்கின்றன. அதனாலேயே எங்களால் அரசின் பங்காளிகளாக இருக்க முடியாது.
ஆனால் காணாமல் போனவர்களின் உறவுகளின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. அதற்காக உடனடியாக எதனையும் செய்துவிடமுடியாது, அரசு மாறியிருக்கிறது என்று கூறப்படுகிறது. உண்மையில் அனைத்தும் மாறிவிடவில்லை. ஜனாதிபதியும் அமைச்சர்களுமே மாறியிருக்கிறார்கள். அரச உயர் அதிகாரிகள் மாறவில்லை. இராணுவ அதிகாரிகள் மாறவில்லை, நாம் ஜெனிவா மாநாட்டில் பிரத்தியேக மாக இளவரசர் செய்ட் ஹுசேனை சந்தித்தோம். பாதுகாப்பு விடயங்கள் மாறவேண்டும். அப்போதுதான் நாட்டில் ஒருசில மாற்றங்கள் நிகழும் அதற்கு காலஅவகாசம் தேவை என்று அவர் என்னிடம் கூறினார்.
ஆகவே ஒரு சில விடயங்களை செயற்படுத்த முடியாது. ஆனால் என்னால் தமிழ்த் தேசியக் .கூட்டமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் ஒரு வாக்குறுதியை வழங்க முடியும். காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் முடியும் வரை உங்களோடு இருப்பேன், எமது கட்சியும் உடன் இருக்கும் என்றார்.