இன அழிப்பின் நோக்கமே வடக்கில் புத்தர் சிலை! - சிவாஜி குற்றச்சாட்டு
வடக்கில் பௌத்தர்களே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கையானது, திட்டமிட்ட இன அழிப்பை நோக்காகக் கொண்டே செயற்படுத்தப்படுகின்றதென வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில், முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற சந்திப்பின்போதே சிவாஜிலிங்கம் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கின் தமிழ் மக்களின் இடங்களை ஆக்கிரமித்து பரவலாக விஹாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்டிய சிவாஜிலிங்கம், குறிப்பாக நயினாதீவில் 62 அடி உயரத்தில் புத்தர் சிலை அமைக்கப்படுவதானது திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையென முதலமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் கலாசார, பண்பாடுகளை அழிக்கும் வகையில் இவ்வாறு பல நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக சுட்டிக்காட்டிய வட மாகாண சபை உறுப்பினர்கள், இத்தகைய இனத்துவ அடையாள அழிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
எனினும், இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்கள் போதாதென குறிப்பிட்ட முதலமைச்சர், இதுகுறித்து வட மாகாணத்தின் சகல உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இவற்றை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
வட பகுதியில் புத்தர் சிலை அமைக்கப்படுவது குறித்து அண்மையில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கேட்டபோது, அதுகுறித்து தமக்குத் தெரியாதென கூறி ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து நழுவிச் சென்றார். அத்தோடு, வடக்கில் நடைபெற்ற மகளிர் தின விழாவொன்றில் கலந்துகொண்ட ஆளுநர், வெள்ளவத்தையில் தமிழர்கள் காணி வாங்கி வாழ்ந்து வருவதைப் போல வடக்கில் சிங்களவர்கள் காணி வாங்கி வாழ்வதில் பிரச்சினை இல்லையென குறிப்பிட்டார்.
அத்தோடு, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாமென குறிப்பிட்டார். வட மாகாண ஆளுநர் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த தமிழ் மக்கள் மத்தியில் இவ்விடயம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, நேற்றைய சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர்களும் தமது விசனத்தை வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.