சம்பிக்க ஏற்படுத்திய விபத்து: சீ.சீ.ரி.வி பதிவுகள் மாயம்!
அண்மையில் கொழும்பு இராஜகிரிய பிரதேசத்தில் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஏற்படுத்திய விபத்து தொடர்பில் பதிவாகிய, சீ.சீ.ரி.வி கமரா காட்சிகள் சில அழிந்துள்ளதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்று (புதன்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றபோது பொலிஸார் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இன்றைய விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பிக்கவின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட தொலைபேசி இணைப்புகள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டார்.
மேலும் குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் சம்பிக்கவிடம் சுமார் 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்துகொள்ளப்பட்டதாக மன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அமைச்சர் சம்பிக்கவுக்கு சொந்தமான வாகனமொன்று மோதியதில், சந்தீப் சம்பத் என்ற இளைஞர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த வாகனத்தை அமைச்சர் சம்பிக்கவே செலுத்தியதாகவும் விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.