வடமாகாண சபையின் அரசியலில் தலையிட மாட்டேன்! - வடக்கு ஆளுநர்
வடமாகாணசபை தனது அரசியலை மேற்கொள்ளட்டும். அதில் நான் தலையிடப் போவதில்லை. ஆனாலும் நான் எனது கடமையைச் சரிவர நிறைவேற்றுவேன் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சர்வோதயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கமைய, கடந்த காலங்களில் வடமாகாண சபைக்கும் முன்னர் கடமையாற்றிய ஆளுநருக்குமிடையில் பல்வேறு விடயங்களில் முரண்பாடுகள் காணப்பட்டிருந்தன. தற்போது வடமாகாணத்தின் புதிய ஆளுநராக நீங்கள் பதவியேற்றுள்ள நிலையில் மாகாணசபைக்கும் உங்களுக்குமான நிலைப்பாடு எத்தகைய வகையில் அமையும் எனக் கேள்வியெழுப்பப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இதேவேளை வடமாகாணத்தில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாகவும் பௌத்த விகாரை அமைப்பது தொடர்பாகவும் வடமாகாண சபையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் உங்களுடைய கருத்துநிலை எத்தகையது என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதன்போது ஆளுநர் கருத்துத் தெரிவித்ததாவது,
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. எனவே அது தொடர்பில் ஆராய்ந்தே பதிலளிக்கவேண்டும். இந்நாட்டில் யாரும் எங்கேயும் குடியேறலாம். அதுவே இந்நாட்டின் நீதி. உதாரணமாக கொழும்பு வெள்ளவத்தை ஒரு குட்டி தமிழ்நாடு போன்றே உள்ளது. அது போன்று எந்த மக்களும் எங்கும் வாழலாம்.
வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்கு காணிகள், நிலங்கள் வழங்கப்படுகின்றபோது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். அதன் பின்னர் எஞ்சிய இடங்களில் ஏனைய மக்களும் இருப்பதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை வடமாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பான கேள்விக்கு ஆளுநர் பதிலளிக்கையில்,
இந்தியாவில் இருந்தே இந்தப் போதைப் பொருட்கள் பெருமளவில் இங்கே கடத்தி வரப்படுகின்றது. இதற்கு காரணம் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான இடைவெளியாகும். அதாவது பயண தூரம் குறைவாக இருப்பதால் இலகுவாக போதைப்பொருட்களை இங்கே கடத்தி வருகிறார்கள். எனினும் அத்தகைய கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்கு கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து செயற்படுகின்றனர். அத்துடன் பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
மேலும் போதைப் பொருட்களை கடத்தி கொண்டு வருகின்றவர்கள் குற்றவாளிகள் என கூறப்படும் நிலையில் அதனைப் பெற்றுக்கொள்பவர்களும் குற்றவாளிகளே. எனவே இவற்றை உணர்ந்து இக் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவர்கள் தொடர்பில் தகவலறிந்தால் அதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி போதைப் பொருள் கடத்தல் செயற்பாட்டை இல்லாதொழிக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.