மஹிந்தவை அழிக்கவே நல்லாட்சி உருவாக்கப்பட்டது - அசாத் சாலி
ராஜபக்சவினரை அழப்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதென, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று (புதன்கிழமை) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியதன் மூலம் ராஜபக்சவினரை வீட்டிற்கு அனுப்பியுள்ளோம். இந்த அரசாங்கம் உருவாகுவதற்கு எஸ்.பி.திஸாநாயக்க எவ்வித பங்களிப்பையும் செய்யவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரக்கப்பட்டு அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கியுள்ளார்.
ஆனால் இன்று எஸ்.பி.திஸாநாயக்கவோ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு கொண்டவந்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தற்போது வெள்ளை வான் இல்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் இருண்ட யுகத்தை உருவாக்க நாம் அனுமதிக்கமாட்டோம்.
தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் இலஞ்ச, மோசடி ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் என்பன மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய சவால்களை இந்த அரசாங்கம் எதிர்நோக்கும். ஆகவே பிரதமர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்