புதிய அரசியலமைப்பின் மூலம் பொருத்தமான அதிகாரப்பகிர்வு உறுதிப்படுத்தப்படும்!
நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் ஐக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவுள்ளோம். உலக நாடுகளில் பல்வேறுவகையிலான அதிகார பகிர்ந்தளிப்புகள் அமுலில் உள்ளன. இருந்தபோதிலும் புதிய அரசியலமைப்பில் இலங்கைக்கு ஏற்றதும் பொருத்தமானதுமான அதிகார பகிர்ந்தளிப்பை முன்னெடுப்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாம் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்கவே திட்டமிட்டுள்ளோம். எமது பயணத்தை முறியடிக்க நினைப்பவர் உண்மையான பௌத்தர் கிடையாது. விகாரைகளுக்கு செல்வது மாத்திரம் பௌத்தம் கிடையாது. அடுத்த பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது உண்மையான பௌத்தர்களை இணங்கண்டு கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பிற்கான விசேட செயலமர்வு நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர் ஏஜ் ஹொட்டலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களின் பிரதிநிதிகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் 70 ஆவது நிறைவாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதன்படி அடுத்த வருடம் அளவில் நாட்டிற்கு தேவையான புதிய அரசியலமைப்பை தயாரித்து நிறைவேற்ற முடியும் என்று நம்புகின்றேன். இதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். அரசியலமைப்பு நிர்ணய சபையின் இறுதி அறிக்கையை சமரப்பித்து அதற்கான அனுமதியை பாராளுமன்றத்திடம் கோருவோம். இதேவேளை புதிய அரசியலமைப்பு தொடர்பில் 70 வருடகால அணுகுமுறைகளை இது வரைக்காலம் பின்பற்றிவந்துள்ளோம். எனினும் இம்முறை அரசியமைப்பு உருவாக்கம் முற்றிலும் மாற்றமானதாக அமையும்.
1943 ஆம் ஆண்டின் போது அரச மந்திரிகள் சபை கபினட் முறைமையிலான அரசியலமைப்பினை கோரியிருந்தது. இதன்படி உலக யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த அரசியலமைப்பினை வழங்குவதாக பிரித்தானியா எமக்கு உறுதியளித்தது. அந்தவகையிலேயே இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்தவொரு அனுபவமும் எமக்கு இருக்கவில்லை. இருந்தாலும் அப்போதைய அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தது. இரண்டாவது குடியரசு யாப்பிலும் அவ்வாறான நிலைமை காணப்பட்டது. இந்த இரண்டு அரசியலமைப்பிற்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை காணப்பட்டது.
ஆனாலும் குறித்த அரசியலமைப்புகளில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன. அதேபோன்று அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பிலான வேலைத்திட்டத்தின் போது சுதந்திரக் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன. இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் கலந்துகொண்டிருந்தால் 1988 ஆம் ஆண்டு தேர்தலின் போது சுதந்திரக் கட்சியினால் பல்வேறு மாகாண சபைகளை வெற்றிக்கொள்ள முடிந்திருக்கும். இது தொடர்பில் அவர்கள் சிந்திக்கவில்லை.
இந்நிலையில் தற்போதைக்கு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக எந்தவொரு கட்சிக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடையாது. இதன்காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய அரசாங்கத்தை நிறுவியுள்ளோம். இதுவரைக் காலம் அல்லாமல் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயகத்தை நிலைநாட்டி ஐக்கியத்தை நிலைநாட்டுமாறு மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளிக்கும் முகமாகவே இந்த பயணத்தை நாம் ஆரம்பித்து தேசிய அரசாங்கத்தை நிறுவினோம்.
அரசியலமைப்பிற்கான வரைபு கிடையாது
இதற்கமைய அரசியலமைப்பு நிர்ணய சபையின் ஊடாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இந்நிலையில் தற்போது அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் வரைபு தயாரிக்கப்படவில்லை. அதேபோன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ வரைபு தயாரிக்கவில்லை. எனவே தற்போதைக்கு எம்மிடம் எந்தவொரு வரைபும் கிடையாது.
நிர்ணய சபைின் பிரதான குழு நியமனம்
எதிர்வரும் ஐந்தாம் திகதி பாராளுமன்ற நிர்ணய சபைக்கான பிரதான குழுவை நியமிக்கவுள்ளோம். இதன்பின்னர் வரைபு தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியும். மக்களின் அபிலாஷைகளே மிகவும் முக்கியமாகும். இதற்கமைய மக்களின் அபிலாஷைகளை மூன்று விதமாக வகைப்படுத்த முடியும். நாம் அனைவரும் இலங்கையர் என்ற சகோதரத்துவமும் சமத்துவமும் பிரதான அங்கமாகும்.. அனைவருக்கும் மத்தியில் சமத்துவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோன்று சர்வஜன வாக்குரிமை இதன் ஒரு அங்கமாகும். இதனை நிலைநாட்டும் வகையில் சுயாதீன தேர்தல் ஆணைகுழுவினை நியமித்துள்ளோம். இதேபோல் அடிப்படை உரிமை சிறப்பம்சம் வாய்ந்தது. தற்போதைய சூழலில் அடிப்படை உரிமை எது என்பதனை புதிய அரசியலமைப்பினூடாகவே தீர்மானிக்க வேண்டியுள்ளது.
மக்கள் கருத்து கோருவதற்கு உபகுழு
இதற்கமைய புதிய அரசியலமைப்பிற்கு மக்களின் கருத்துக்களை கோருவதற்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளோம். மக்களின் கருத்துக்களை கோரும் குழுவினது அறிக்கையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்போம். அத்துடன் தேவையேற்படின் உபகுழு நியமிக்கவும் முடியும். இதற்கு மக்கள் கருத்து கோரும் குழுவினது ஆலோசனை எமக்கு அவசியமாகும்.
தேர்தல் முறைமை
இதேவேளை அரசியலமைப்பில் தேர்தல் முறைமைக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளோம். தற்போதைக்கு குறித்த விடயதானத்தின் மூல அம்சம் தொடர்பில் அனைத்து கட்சிகளிடத்திலும் இணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் கலப்பு தேர்தல் முறைமையில் பங்கீடுகள் தொடர்பில் உறுதியான தீர்மானம் அவசியமாகும். அதேபோன்று விகிதாசார முறைமையில் தேசியப்பட்டியலை உள்ளடக்குவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்க வேண்டியுள்ளது. தேர்தல் முறைமையின் எத்தகைய வழிமுறைகளை உள்ளடக்குவது என்பது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் பேசி வருகின்றோம். இதற்காகவே காலஅவகாசம் தேவைப்படுகின்றது. இந்நிலையில் மேற்குறித்த விடயங்களிலேயே கட்சிகளுக்கு இடையில் இணக்கம் ஏற்பட வேண்டியுள்ளது. எந்தவொரு கட்சியும் தன்னுடைய கட்சியின் பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு விரும்ப கொள்வதில்லை. ஆகவே இந்தவிடயத்தில் இணக்கம் காணவேண்டியுள்ளது.
அதேபோன்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்குதவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூரண இணக்கம் தெரிவித்துள்ளார். ஆகவே தற்போது பாராளுமன்றத்தின் அதிகாரத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. இதனை எந்த அணுகுமுறையில் முன்னெடுப்பது என்பதனை அரசியலமைப்பு நிர்ணய சபை தீர்மானிக்கும்.
அதிகார பகிர்ந்தளிப்பு
புதிய அரசியலமைப்பு தயாரிப்பின் போது அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவேண்டியுள்ளது. ஒற்றையாட்சிக்கும் ஐக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். உலக நாடுகளில் பல்வேறு அதிகார பகிர்ந்தளிப்புகள் அமுலில் உள்ளன. இதற்கமைய அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு விதமான அதிகார பகிர்ந்தளிப்புகள் அமுல்படுத்தப்படுகின்றன. இதன்பிரகாரம் புதிய அரசியலமைப்பில் இலங்கைக்கு ஏற்றதும் பொருத்தமானதுமான அதிகார பகிர்ந்தளிப்பை முன்னெடுப்போம்.
இதேவேளை தேவைக்கு அப்பால் அமைச்சுக்களுக்கு அதிகாரங்கள் உள்ளதா என்பது தொடர்பிலும் ஆராயவேண்டியுள்ளது. இது தொடர்பில் அதிகாரங்களை பரவலாக்கம் செய்ய கூடிய வழிமுறைகளும் உள்ளன.
அத்துடன் பழைய முறைமையின் பிரகாரம் பாராளுமன்ற ஆலோசனை குழுவை நிறுவி அனைவரது ஆலோசனைகளையும் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதனூடாக பாரளுமன்றம் வலுப்படுத்தப்படும்.
புத்தரின் போதனையை நினைவூட்டிய சம்பந்தன்
அத்துடன் எனக்கு சென்ற வாரமளவில் தேசிய சட்ட சம்மேளணத்தின் போது புத்தரின் போதனை குறித்து எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் நினைவூட்டினார். அதாவது அனைவரும் சமாதானத்துடன் ஒன்றிணைய வேண்டும். சமாதானமாக பேச வேண்டும். சமாதானமாக கலைந்து செல்லவேண்டும். இதுவே புத்தரின் ஆலோசனையாகும். இந்த புத்தரின் ஆலோசனையை நாம் ஏற்று நடக்க வேண்டும்.
இதற்கு மாறாக பாராளுமன்ற நடவடிக்கைகளில் செயற்படாதவர் உண்மையான பௌத்தராக இருக்கமுடியாது. நாம் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்கவே திட்டமிட்டுள்ளோம். ஆகவே எமது பயணத்தை முறியடிக்க நினைப்பவர்கள் நிச்சியமாக பௌத்தராகவோ, இந்துவாகவோ ,முஸ்லிமாகவோ, கிறிஸ்தவராகவோ இருக்க முடியாது. ஆகவே அடுத்த பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது உண்மையான பௌத்தர்களை இணங்கண்டு கொள்ளமுடியும்.
இந்த செயலமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா எம்.பி கலந்து கொண்டுள்ளார். ஆகவே இவர் புத்தரின் போதனைகளை பின்பற்ற கூடியவராக மாறியுள்ளார். பௌத்த மதத்தை பின்பற்றுபவர் என்ற பெயரில் விகாரைகள் வாயிலாக செல்பவர்கள் உண்மையான பௌத்தர்கள் அல்ல. விகாரைகளுக்கு செல்வது மாத்திரம் பௌத்தம் அல்ல. ஆகவே விகாரைகளுக்கு மாத்திரம் செல்லாமல் உண்மையான பௌத்தர்களாக செயற்படவேண்டும் என்றார்.