Breaking News

காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இன்று வவுனியாவில்

யுத்தத்தின் போது காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான இறுதிக்கட்ட அமர்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியாவில் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்றும் நாளையும் மாத்திரம் நடைபெறவுள்ள குறித்த அமர்வில், மாவட்டத்தின் சகல பிரதேச மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இறுதிக்கட்ட சாட்சியப்பதிவில், முதல் மூன்று நாட்களும் முல்லைத்தீவில் சாட்சியப்பதிவு இடம்பெற்றது. குறித்த மூன்று நாட்களிலும் 466 பேர் சாட்சியங்களை பதிவு செய்ததுடன் புதிதாக 137 முறைப்பாடுகளையும் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

அத்தோடு, மன்னாரில் நேற்று நடைபெற்ற சாட்சியப்பதிவில், 167 சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் புதிதாக 28 பேரின் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடந்த நாட்களில் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்களில் அதிகமானவை, இலங்கை இராணுவத்திற்கு எதிராகவே அமைந்துள்ளதென்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, வட மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களுக்கான சாட்சியப் பதிவும் விரைவில் முன்னெடுக்கப்பட்டு விசாரணைகளை நிறைவுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.