Breaking News

வடக்கில் விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் ஆளுநருக்குத் தெரியாதாம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பௌத்தர்களே இல்லாத கொக்குளாய் கிராமத்திலுள்ள தனியார் காணியொன்றை ஆக்கிரமித்து, மிகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்படுகின்ற பௌத்த விஹாரை குறித்து தனக்கேதும் தெரியாதென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கொக்குளாய் பௌத்த விஹாரை அமைப்புத் தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

”வடக்கில் உள்ளவர்களும் தெற்கிலுள்ளவர்களும் உண்மையை விளங்கிக்கொள்ளாது செயற்படுகின்றனர். நயினாதீவில் பிரமாண்டமான முறையில் பௌத்த விஹாரை அமைக்கப்பட்டு அங்கு பெரிய தூபியொன்று வைக்கும் பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதுபற்றி இன்றும் சிலர் உண்மையை விளங்காது தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

நயினாதீவில் இருக்கின்ற இந்து ஆலயங்களை மறைத்து பௌத்த விஹாரை அமைக்கப்படுவதாக இங்கிருக்கின்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதே நேரம் நயினாதீவில் பௌத்த விகாரை அமைப்பதற்கு அங்குள்ளவர்கள் தடை அல்லது எதிர்ப்பு என்று தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அவை இரண்டும் உண்மையல்ல. அங்கு இந்து ஆலயமும் இருக்கின்றது, பௌத்த விஹாரையும் இருக்கின்றது. இவ்வாறான நிலையிலேயே குறித்த விஹாரையில் பெரிய தூபியொன்று அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆயினும் தற்போது அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

இதற்கு பலரும் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஆனால் கடல் சார்ந்த பிரதேசத்தில் எதனையும் அமைப்பதானால் கடல் வள அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும். அத்தகைய அனுமதியைப் பெறாமலேயே குறித்த தூபி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அமைச்சினால் குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே வடக்கு, தெற்கு என்ற பேதம் இல்லாமல் நாட்டில் இருக்கின்ற அனைவரும் யதார்த்தத்தை விளங்கிக்கொண்டு உண்மை நிலையை அறிந்து அதற்கமைய செயற்பட வேண்டும்” என்றார்.

பௌத்தர்களே இல்லாத இடத்தில் பௌத்த விஹாரை எதற்கென ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோது, தாம் இதுகுறித்து ஆராய்ந்து பதில் சொல்வதாக ஊடக சந்திப்பிலிருந்து ஆளுநர் இடையில் எழுந்துசென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கொக்குளாய் கிராமத்தில் காலங்காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து தற்போது சிங்கள மக்களும் குடியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில்தான் பௌத்தர்களே இல்லாத இடத்தில் பௌத்த விஹாரையொன்றைக் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணியொன்றையும் அபகரித்தே இந்த விஹாரையை அமைத்து வருகின்றனர்.

இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு போராட்டங்களையும் நடத்தியிருந்தனர். அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினரான துரைராசா ரவிகரனும் இதற்கு கடுமையான எதிரப்பைத் தெரிவித்து, இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென வட மாகாண சபையில் பிரேரணையொன்றும் கொண்டுவந்து அது நிறைவேற்றப்பட்டிருந்தது.

குறித்த விஹாரை அமைப்பிற்கு வட மாகாண முதலமைச்சரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து, தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந்த போதும் அங்கு விஹாரை அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கிடைக்கின்றன. இந்நிலையில், இன, மத நல்லிணக்கம் பற்றி பேசும் வடக்கு ஆளுநர் இதற்கு உரிய பதில் வழங்காமல் ஊடக சந்திப்பிலிருந்து எழுந்து சென்றமையானது பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் விசனமடையச் செய்துள்ளது.