Breaking News

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்! - ஜே.வி.பி

தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவரும் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு, புதிய அரசியலமைப்பின் ஊடாக நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணி போராடுமென அதன் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் தொடர்பில் விபரிக்கும்போதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

”புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்பதில் மக்கள் விடுதலை முன்னணி தெளிவாக உள்ளது. ஆனால் அது எவ்வாறான தீர்வு என்பது குறித்து, சூழ்நிலையை பொறுத்தே தீர்மானிக்க முடியும். எனினும், தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிவரும் அரசியல் பிரச்சினைக்கு நியாயமான தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்ற விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி தேவையான தலையீட்டை மேற்கொள்ளும்.

நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியமாக உள்ளது. எமது கட்சியும் அதற்கான பங்களிப்பை வழங்கும். அரசாங்கத்தின் நகர்வுகளை கருத்திற்கொண்டே எமது நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். எனினும் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு புதிய அரசியமைப்பின் ஊடாக தீர்வுகாண முடியுமென மக்கள் விடுதலை முன்னணி நம்பவில்லை” என்றார்.