சம்பூரில் முன்னரைவிடப் பெரிய தளத்தை அமைத்துள்ள கடற்படை
சம்பூரில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தனியார் காணியில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தளத்துக்குப் பதிலாக, அதைவிடப் பெரியதொரு தளத்தை அதே பகுதியில் அமைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
2006ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம், சம்பூர் பிரதேசம் சிறிலங்கா படையினரின் வசம் வந்ததையடுத்து, 2007ஆம் ஆண்டு, அங்கு பாரியதொரு கடற்படைத் தளத்தை கடற்படை அமைத்திருந்தது.
237 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த இந்த தளம் 2013ஆம் ஆண்டு எஸ்.எல்.என்.எஸ் விதுர என்று பெயரிடப்பட்டது.பொதுமக்களின் காணியில் அமைக்கப்பட்டிருந்த இந்த தளத்தின், ஒரு பகுதி, கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 60 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையளிப்பப்பட்டது.
எஞ்சியிருந்த 177 ஏக்கர் காணிகளும் கடந்த வெள்ளிக்கிழமை கடற்படையினரால் முழுமையாக விடுவிக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
இங்கிருந்த கடற்படைத் தளம், அருகில் உள்ள வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.கைவிடப்பட்ட தளம் அருகிலேயே, புதிதாக தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முன்னைய தளத்தை விடவும் சற்று பெரிதாகவே புதிய தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடற்படைத் தளம் இடம்மாற்றப்பட்டதால், அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமைகளில் பாதிப்பு ஏற்படாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.