அனைத்து கைதிகளினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும்! - சுவாமிநாதன்
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற அனைத்து கைதிகளின் உரிமைகளையும் சிறைச்சாலை திணைக்களம் பாதுகாக்கும் என சிறைச்சாலைகள் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் காணப்படும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகளிடையே போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை கையாளுதல் உள்ளிட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் முகமாக பயிற்சியளிக்கப்பட்ட நான்கு பொலிஸ் மோப்ப நாய்களை சிறைச்சாலைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற இந்து கலாசார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உரையாற்றுகையில்
நாடளாவிய ரீதியில் காணப்படும் சிறைச்சாலைகளில் கைதிகள் சட்டவிரோத போதைப்பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்களை சிறைச்சாலைகளில் பயன்படுத்தல், அவற்றை ஏனையோருக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட சில விடயங்களை கட்டுப்படுத் தும் முகமாக சிறைச்சாலைகள் திணைக்களம் செயற்றிட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளது.
அந்தவகையில் முதல் கட்டமாக வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு பயிற்சி பெற்ற நான்கு மோப்ப நாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இவ்வாறான நிலையில் சர்வதேச நாடுகளின் உதவிகளின் அடிப்படையில் சிறைச்சாலை திணைக்களத்தின் கீழ் உள்வாங்கப்படும் அதிகாரிகளுக்கு பயிற்சிகளும் வெளிநாடுகளில் வழங்கப்படவுள்ளது. இவ்வாறான செயற்றிட்டங்கள் மூலம் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளிடமிருந்து உரிய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்மென எதிர்பார்க்கின்றோம்.
எதிர்வரும் காலங்களிலும் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதன் மூலம் அனைத்துவிதமான குறைபாடுகளையும் நிவர்த்திசெய்ய எதிர்பார்க்கின்றோம். கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இடமாற்றம் செய்ய முடியாமைக்கான காரணம் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட சில விடயங்களில் காணப்படுகின்ற தொடர்ச்சியான குறைபாடுகளாகும். அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையின் கீழ் சில செயற்றிட்டங்களை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இதேவேளை இந் நிகழ்வானது நேற்று காலை 9.30க்கு ஆரம்பமாகும் என அமைச் சினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னரே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.