எங்களின் கதை மட்டும் மாறவில்லை! ஒரு சாட்சியம்
நாட்டில் ஆட்சிகள் மாறுகின்றன காட்சிகளும் மாறுகின்றன. ஆனால் காணாமல் போனவர்களின் நிலைப்பாட்டில் இதுவரைக்கும் எந்தவித மாற்றமும் காணவில்லையே என காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு முன் பெண்ணொருவர் கண்ணீருடன் சாட்சியமளித்தார்.
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு நேற்று திங்கள் கிழமை மன்னாரில் விசாரணை அமர்வை நடத்தியது. மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசாரணை அமர்வில் வங்காலையைச் சேர்ந்த உமாபதி டொரின் பீரிஸ் (வயது 40) என்பவரே மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
நாங்கள் முல்லைத்தீவு வட்டுவாகன் பகுதியில் இருந்தபோது இரானுவம் தங்களிடம் சரண் அடைந்தால் தப்பித்துக் கொள்வீர்கள் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 17.05.2009 அன்று எனது கணவர் பரராஐசிங்கம் உமாபதி (அந்நேரம் அவரது வயது 33) ஐம்பது பேருடன் அருட்பணியாளர் பிரான்சீஸ்வுடன் இராணுவத்திடம் சரண் அடைந்தார்கள். இவர்கள் சரண் அடைந்ததும் இராணுவத்தினர் இலங்கை போக்குவரத்து பேரூந்தில் சரண் அடைந்த ஐம்பது பேரையும் ஏற்றிச் சென்றனர்.
இவர்கள் இராணுவத்தினரிடம் சரண் அடைந்து தற்பொழுது ஏழு வருடங்கள் பூர்த்தியாகின்றன்றன நாங்கள் பல இடங்களில் இதுவிடயமாக முறையீடு செய்யப்பட்டும் இதுவரைக்கும் எங்களுக்கு இதுவிடயமான எந்த முடிவும் கிடைக்கப் பெறாத நிலையே காணப்படுகிறது. 11 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறும் அரசு ஏன் இராணுவத்தினரிடம் சரண் அடைந்த இந்த ஆட்களைப்பற்றி மௌனம் காக்கின்றது என எங்களுக்கு தெரியவில்லை.
இந்த ஐம்பதுபேரில் ஆறு பேர் சம்பந்தமாக நீதிமன்றில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தற்பொழுது இதுவிடயமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்த வழக்கு விசாரணையொன்றில் இவர்கள் சம்பந்தமான விபரங்கள் தன்னிடம் இருப்பதாக இராணுவத்தின் ஒருவர் மன்றில் தெரிவித்ததைத் தொடர்ந்து எதிர்வரும் மாதம் 19 ஆம் திகதி இது விடயமான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கும்படி நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.
இது இப்படியிருக்க இந்த நாட்டில் ஆட்சிகள் மாறுகின்றன காட்சிகளும் மாறுகின்றன. ஆனால் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எந்த மாற்றங்களையும் நாங்கள் காணவில்லை. எனது கனவரின் நிலை என்னவோ என கண்ணீர் சிந்தியவாறு தனது உள்ளக்கிடக்கைகளை ஆணைக்குழு முன் பதிவு செய்தார்.