நாகதீபயில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புத்தர் சிலையை இடைநிறுத்துமாறு உத்தரவு
நாகதீபயில் அமைக்கப்பட்டு வரும் புத்தர் சிலை நிர்மாணிப்பை இடைநிறுத்துமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.
வரலாற்று புகழ்மிக்க பழமையான நாகதீப விகாரையில் 12 கோடி ரூபாய் செலவில் 75அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் குறித்த புத்தர் சிலையின் நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்தும் படி யாழ் அரசாங்க அதிபரால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விகாரையின் நவதகல பதுமகித்தி தேரருக்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வடக்கு,தெற்கு மக்களுக்கு இடையே புரிந்துணர்வு ஏற்படுத்தும் முக்கிய இடமான நாகதீப விகாரையை அழிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தேரர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்கள் உட்பட்ட அனைத்து பொதுமக்களும் இந்த புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு ஒத்துழைப்பை நல்கியுள்ள வேளை குறித்த அரசாங்க அதிகாரி உள்ளிட்ட குழுவினர் தனக்கு இவ்வாறானதொரு கடிதம் அனுப்பியுள்ளமை மிகவும் வேதனையடைச் செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கை வந்தாலும் குறித்த புத்தர் சிலை நிர்மாணிப்பை கைவிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாகதீப விகாரையின் பாதுகாப்பிற்காக தான் பின்நிற்கப் போவில்லை என்றும் இதற்காக ஜனாதிபதி,பிரதமர் மற்றும் உயர்மட்ட அரசஅதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.