தமிழ் ஊடகவியலாளர் படுகொலை விசாரணையில் பாரபட்சம்!- சி.வி.குற்றச்சாட்டு
கொலைசெய்யப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெறுகின்ற போதும் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றம் சாட்டினார்.
தமிழ் ஊடகவியலாளர் வடக்குதெற்கு ஊடகவியலாளர்களையும் மக்களையும் ஒன்றினைத்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக ஊடகத்துறை அமைச்சரின் தலைமையில் தமிழ் சிங்கள ஊடகவியலார்கள் நேற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை சந்தித்தனர். இந்த சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஊடகப் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போதே முதலைச்சர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டினார்.
அவர் மேலும் கூறுகையில்,
சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்வதில் எம்மத்தியில் எந்த முடன்பாடுகளும் ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியில் எந்த தீர்மானத்தையும் எட்டாது இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கதாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்ட பின்னரே ஏனைய நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டினார்.
வடக்கு தெற்கு ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலபடுத்த வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கின்றமை நல்ல விடயம். அதை நாம் வரவேற்கின்றோம். அதே வேளையில் எனது பக்க கருத்துகளையும் எண்ணங்களையும் பிரச்சினைகளையும் கருத்தில்கொண்டும் செயற்பட வேண்டும். குறிப்பாக இதுவரையில் நாற்பதற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் நான்கு பேர் மட்டுமே சிங்கள ஊடகவியலாளர்கள். மற்றைய அனைவரும் தமிழ் ஊடகவியலாளர்கள். கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்களில் எனது நண்பன் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.அவர்கள் தொடர்பில்
விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது நல்ல விடயம். அதேபோல் கொல்லப்பட்ட எமது தமிழ் ஊடகவியலார்கள் தொடர்பில் இன்னும் விசாரணைகள் முன்னெடுக்கப்படாதது எங்களுக்கு மன வருத்தத்தையும் வேதனையையும் தருகின்றது.
அதுமட்டும் அல்ல தமிழ் ஊடகவியலாளர்களை கொன்றவர்கள் யார் என மக்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர்கள் இன்னும் உள்நாட்டில் உள்ளனர் என கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் தொடர்பில் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியாதது ஏன் என்ற விடயமும் எமக்கு ஏமாற்றத்தை தருகின்றது. எனினும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார் என்றும் அதன் விடயங்கள் தொடர்பில் விபரங்களை ஜனாதிபதியின் பிரதிச் செயலாளரிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டனர். இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுமாயின் அதை நாம் வரவேற்கின்றோம்.
அதேபோல் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதில் எம்மத்தியில் எந்த முடன்பாடுகளும் ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அரசியல் ரீதியில் எந்த தீர்மானத்தையும் எட்டாது இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது எந்தவித நன்மையையும் தரமுடியாது. அவ்வாறு செயற்பட்டால் ஒரு அளவுக்கு மேல் எந்தப் பயனையும் உருவாக்காது.
மிகவும் முக்கியமாக எமது அரசியல் பிணக்குகளையும் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும். அந்த பிரச்சினைகளை தீர்க்காது ஒன்றிணைந்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியம் இல்லை. காரணாம் மக்கள் எந்த நிலையிலும் தமது அரசியல் தீர்வை எதிர்பார்த்து வருகின்றனர். குறிப்பாக தென்னாபிரிக்காவில் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்ட நிலைமையில் அங்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்ட பின்னரே ஏனைய நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் தான் உண்மை மற்றும் நல்லிணக்க செயன்முறைகளை உருவாக்கினார்கள். ஆகவே இலங்கையிலும் அவ்வாறான நிலைமைகள் அவசியமானது.
எனினும் இங்கு நல்லிணக்க செயற்பாடுகள் மட்டும் உண்மைகளை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதே நிலையில் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வும் எட்டப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அரசாங்கம் தெரிவிக்கின்றது. அதை நான் வரவேற்கிறேன். உண்மையில் அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசானகம் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
அதேபோல் இப்போது வடக்கு தெற்கு மொழிப்பிரச்சினை என்ற ஒரு சிக்கலும் உள்ளது. வடக்கு சம்பந்தமாக வெளியிடும் கருத்துகள் தெற்கில் வேறு அர்த்தத்தில் அல்லது பக்கசார்பாக கொண்டுசெல்லப்படுகின்றது. அதேபோல் தெற்கின் கருத்துகளும் வடக்கில் தவறாக கருத்தில்கொண்டு செல்லப்படுவதாக குறிப்பிடுகின்றனர். இதனை தவிர்க்க வேண்டியது அவசியம். ஆகவே இந்த விடயங்களை தவிர்க்க இரு தரப்பினரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே வரும் காலத்தில் ஊடகவியலாளர்களின் மூலமாக அவர்களின் நல்லெண்ண செயற்பாடுகள் மூலமாக ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய நிலைமை ஏற்படும் என நம்புகின்றேன்.