விடுதலைப் புலிகளின் தனி ஈழக் கொள்கை இன்னும் தோல்வியடையவில்லை!
ஸ்ரீலங்காவில் யுத்தம் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் சரியாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யுத்தம் எவ்வாறான காரணங்களினால் ஏற்பட்டது? மீண்டும் அவ்வாறான ஒரு யுத்தம் ஏற்படாதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொள்வதே மிக முக்கியமானது.
சுதந்திரம் ஏற்பட்டது முதல் இதுவரை தீர்க்கப்படாத மிக முக்கியமான பிரச்சினையாகவே தான் இதனை நோக்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் ஏற்படாவிடின் அதுவே முக்கிய பிரச்சினையாக அமைகின்றது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போதும், ஈழத்திற்கான விடுதலைப் புலிகளின் கொள்கை தோல்வியடையவில்லை.
விடுதலைப் புலிகளின் தனி ஈழத்திற்கான கருத்தை துப்பாக்கிக் குண்டுகள் எறிகணைகள் மூலம் தோல்வியடையச் செய்ய முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தனிநாட்டுக்கான கோரிக்கையை செயலிழக்கச்செய்ய வேண்டுமாயின் இந்நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவேண்டும்.
அத்துடன் இன ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக தாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தடுக்கவோ, நாட்டை தாரைவார்த்துக்கொடுக்கின்றோம், நாட்டை பலவீனப்படுத்துகின்றோம் என்று கூறுபவர்களோ நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதிருக்க மேற்கொண்டுள்ள திட்டங்கள் என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் தீர்க்கப்படாதுள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க வேண்டும். அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்துவைக்காதபோது எதிர்காலத்தில் மீண்டும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
ஆகையால் அதற்கு முன்னுரிமை கொடுத்து தீர்த்துவைக்க வேண்டும். எதிர்காலத்தில் ஒரு யுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
புதிய அரசியல் யாப்பின் ஊடாகவும் நடைமுறையிலுள்ள யாப்பின் ஊடாகவும் மக்களின் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.