தமிழ் மக்கள் இழந்த சகல உரிமைகளையும் வழங்குவோம்!
இதுவரை காலமும் தெற்கில் மட்டும் இருந்த நல்லிணக்கம் இன்று வடக்கிற்கும் சென்றுள்ளது. தமிழ் மக்கள் இழந்த அனைத்து உரிமைகளையும் எமது நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.
பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றினையும் நல்லிணக்க பயணம் எனும் தொனிப்பொருளில் ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த நல்லிணக்க பயணம் நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து ஆரம்பமாகியது. இதன்போது ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி ஊடகத்துறை அமைச்சர் கருணாரதன பரணவிதான, ஊடக அமைச்சின் அதிகாரிகள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கொழும்பில் இருந்து புகையிரதத்தில் பயணித்தனர். இதன்போது அமைச்சர் கயந்த கருணாதிலகவின் இந்த விஜயத்தை குருநாகல், வவுனியா, கிளிநொச்சி,யாழ்ப்பாணம் பிரதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் வரவேற்றனர்.
மேலும் இந்த விஜயம் தொடர்பில் அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிபிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,நாட்டில் முப்பது வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் முன்னைய அரசாங்கத்தினால் நாட்டு மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியாமல் போய்விட்டது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக மார்தட்டிக்கொள்ளும் மஹிந்த குடும்பத்தினரால் யுத்தத்தின் பின்னரான மக்களின் நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.
இதுவரை காலமும் தெற்கில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த நல்லிணக்கம், மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வந்த அபிவிருத்தி செயற்பாடுகள் வடக்கின் பக்கம் செல்லாது தடுக்கப்பட்டுவிட்டது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஐந்து ஆண்டுகளில் தமது குடும்ப அரசியலின் புகழ் பாடியமையும், ஊழல் மோசடிகளில் நாட்டை பழக்கப்படுதியமையையுமே இவர்களால் செய்ய முடிந்தது. மாறாக இவர்களின் ஆட்சியில் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் இந்த கூட்டாட்சி பயணத்தில் நல்லிணக்கம் என்ற பலமான ஒன்றை நாம் கட்டியெழுப்பி நாட்டில் நிரந்தர சமாதானம் ஒன்றிற்கான பலமான அடித்தளத்தை இட்டுள்ளோம். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக ரீதியிலான ஆட்சி மாற்றம் இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு மக்கள் மத்தியில் புரிந்துணர்வையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் தமிழ், சிங்கள மக்களை இணைக்கும் வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இத்தனை காலமாக தெற்கு சிங்கள மக்களுக்கு மட்டுமே நாட்டில் உரிமைகளும், சலுகைகளும் முன்னுரிமையாக வழங்கப்பட்டு வந்தது. இனவாதமும் சிறுமான்மை மக்கள் மீதான அடக்குமுறையும் பலமாக காணப்பட்டது.ஆனால் இன்று அவ்வாறு இல்லாது தமிழ் மக்களுக்கும் சம உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கி அவர்களின் நிலைபாடுகளையும் அங்கீகரிக்கும் செயற்பாடுகள் பலமடைந்து வருகின்றது.
அதை ஒரு சிலர் இன்னும் இனவாதமாக விமர்சித்து வந்தாலும் அதையும் தாண்டிய ஜனநாயக செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இத்தனை காலமாக வழங்கப்படாத தமிழ் மக்களின் நிலங்களையும் காணிகளையும் இன்று அந்த மக்களுக்கு நாம் பெற்றுக்கொடுத்து வருகின்றோம். அதேபோல் தமிழ் ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் நாம் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
ஆகவே கடந்த ஜனவரி மாதம் இந்த நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றத்தின் விளைவாக இன்று நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் ஒன்று உருவாக்கி வருகின்றது. ஆகவே இத்தனை காலமாக தமிழ் மக்கள் புறக்கணித்தும், அடக்கப்பட்டும் வந்த நிலையில் தமிழ் மக்கள் இழந்த அனைத்து உரிமைகளையும் இந்த ஆட்சியில் நல்லாட்சி அரசாங்கதின் மூலமாக பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.