காணாமல் போனவர்களின் கண்ணீரோடு விளையாடும் இலங்கை அரசு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு என்ற ஒரு ஆணைக்குழுவை நிறுவினார். தமிழ் ஈழ மக்களுக்கு எதிராக தான் இழைத்த போர்க்குற்றங்களை மறைக்கவும் காணாமல் போனோர், சரணடைந்து மறைக்கப்பட்டோர் விவகாரங்களை தன் பாதையில் திருப்ப ராஜபக்ச அத்தகைய செயற்பாட்டை செய்தார்.
அதாவது, காணாமல் போகச் செய்யப்பட்டவனே கண்டு பிடிக்கிறானாம். சரணடைந்தவர்களை மறைத்தவே தேடுகிறானாம். அதற்கு அவரே ஒரு ஆணைக்குழுவை நியமித்திருக்கிறார். தன்னுடைய ஆட்சிக்காலம் முழுவதும் அந்த ஆணைக்குழுவை வைத்து காலத்தை கடத்தினார் ராஜபக்ச. ஒருபுறத்தில் அந்த ஆணைக்குழுவை நடத்திக்கொண்டு அதில் சாட்சியம் வழங்கும் மக்களை மறுபுறத்தில் காணாமல் போகச் செய்த இராணுவம் கண்காணித்தது.
மகிந்த ராஜபக்சவின் அரசியல் தேவைக்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ராஜபக்சவுக்காக அரசியல் தேவையைத்தானே நிறைவேற்றும் வகையில் செயற்பட்டது. ராஜபக்சவின் ஆட்சியில் நியமிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநரை மாற்றுகின்றனர் மைத்திரி – ரணில் அரசு. அதிகாரிகளை மாற்றுகின்றனர். நீதியரசை மாற்றுகின்றனர். ஆனால் காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் தலைவரை மாற்றவில்லை.
ஏனென்றால் இது தமிழ் ஈழ மக்கள் சம்பந்தப்பட்ட விடயம்தானே. ராஜபக்சவின் ஆள் முன்னெடுத்தால் என்ன? வேறு எவராவது முன்னெடுத்தால் என்ன? எல்லாரது நோக்கும் ஒன்றுதானே? காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு தன்னுடைய இறுதி அமர்வுகளை முல்லைத்தீவில் நடாத்தியுள்ளது. இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு சாட்சியம் அளித்துள்ளனர். தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரி கண்ணீரோடு அந்த மக்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.
19 வயதான தன்னுடைய மகள் ஒருவர் இராணுவத்திடம் இருந்தாகவும் அவர் காணாமல் போயுள்ளதாகவும் தந்தை ஒருவர் சாட்சியம் அளித்தார். இதற்கு பதில் அளித்த காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் தலைவர் மாக்ஸ்வெல் பரணகம “இராணுவப் பகுதிக்கு வரும்போது, பெண் பிள்ளைகளை பத்திரமாக அழைத்து வந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இராணுவப் பகுதியில் தமிழ் பெண்களுக்கு நடந்த அநீதியை ஏற்றுக்கொள்ளுகிறார். மாபெரும் போர்க்குற்றம் இடம்பெற்றதை அவர் ஒப்புக்கொண்டமைக்கு இது ஒரு உதாணரம்.
மகிந்த ராஜபக்ச காலத்தில் மாக்ஸ்வெல் பரணகம ஒருபுறம் விசாரணையில் சாட்சியங்களை பதிவு செய்ய மறுபுறத்தில் இராணுவமும் புலனாய்வுத்துறையும் அரச அதிகாரிகளும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளிடம் சென்று மரணச்சான்றிதழையும் இழப்பீட்டையும் பெறுமாறு கூறியுள்ளனர். அதற்கு ஒருபோதும் தமிழ் மக்கள் சம்மதிக்கவில்லை.
தமது உறவுகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியே அவர்கள் சாட்சியம் அளிக்கின்றனர். பெரும்பாலானவர்களின் கையில் சரணடைந்தும் காணாமல் போகச் செய்யப்பட்டும் இருப்பவர்கள் உயிருடன் இருக்கும் ஆதாரங்களை அந்த மக்கள் வைத்திருக்கிறார்கள். நேற்றைய தினமும் முல்லைத்தீவில் ஒரு தாய் காணாமல் போன பிள்ளையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறியுள்ளார்.
இதைப்போலவே புகைப்படங்களிலும் சிறைச்சாலைகளிலும் பலர் உயிருடன் உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிலையில் உயிருடன் இருப்பவர்களுக்கு மரணச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதுதான் மாக்ஸ்வெல் பரணகமவின் பணியா? அதற்கு ஏன் காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு என்று பெயர் வைக்க வேண்டும். மரணச்சான்றிதழ் வழங்கும் ஆணைக்குழு எனப் பெயரிட்டிருக்கலாமே?
உலகை ஏமாற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு என்ற பெயர். தமிழ் மக்களை ஏமாற்ற மரணச்சான்றிதழா? உண்மை அறியும் விசாரணையே தமிழ் ஈழ மக்களின் தேவை.