Breaking News

கூட்டமைப்புக்கு மாற்றான புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சி தீவிரம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான புதிய தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சிகள் கொழும்பில் இடம்பெற்று வருகின்றன. இதுதொடர்பான கலந்துரையாடல் ஒன்று,நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலார் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் நேற்று முன்தினம் மாலை கொழும்பில் நடந்த இந்தக் கலந்துரையாடலில், ஈ.பி.டி.பி.யின் செயலர் டக்ளஸ் தேவானந்தா, சிறிரெலோ கட்சியின் செயலர் ப. உதயராசா, ஈரோஸ் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றதாகத் தெரியவருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர், அ.வரதராஜப்பெருமாள் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர் சமூகமளிக்கவில்லை என்று தெரியவருகிறது.

இந்தநிலையில், மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் நாள் மீண்டும் கூடி, இதுபற்றிக் கலந்துரையாடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. வரதராஜப்பெருமாள் மற்றும் தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன் உள்ளிட்ட வேறு சில கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.