Breaking News

இராணுவ பகுதியில் பெண்களை அவதானமாக அழைத்து வந்திருக்கவேண்டும்!

யுத்த காலத்தில் பெண் பிள்ளைகளை இராணுவப் பகுதிக்குள் அழைத்து வந்தபோது, அவதானமா இருந்திருக்க வேண்டுமென காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு பிரதேச செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில், சாட்சியம் வழங்க வந்த தந்தை ஒருவரிடம் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்ற குறித்த தந்தை, 19 வயதான பாமினி எனும் தனது மகளை கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் தொலைத்துவிட்டதாக தெரிவித்தபோதே ஆணைக்குழுவின் தந்தை மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.

இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் தனது மூன்று பிள்ளைகளுடன் வந்தடைந்தபோது, பெண்களை சோதனைக்குட்படுத்தும் வரிசையில் தனது மகள் நின்றபோது காணாமல் போனதாகவும், அவரை தேடித்தருமாறும் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார். தமது பிள்ளைக்கு நட்டஈடு தருவதாக புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினருடம் தம்மிடம் தெரிவித்ததாக குறிப்பிட்ட அந்த தந்தை, தமக்கு நட்ட ஈடு வேண்டாமெனவும் தமது மகளை கண்டுபிடித்து தருமாறும் ஆணைக்குழுவிடம் மன்றாட்டத்துடன் கேட்டுக்கொண்டார்.